fbpx
Homeபிற செய்திகள்நறுவீ மருத்துவமனையில் செவிலியர்களுக்கு கௌரவம்

நறுவீ மருத்துவமனையில் செவிலியர்களுக்கு கௌரவம்

வேலூர் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற சர்வதேச செவிலியர் தின விழாவில், மருத்துவச் சேவையில் சிறப்பாக பணியாற்றி வரும் செவிலியர்களுக்கு விருது, சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் மே 12-ம் சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

மருத்துவமனை வளாகத்தில் நடந்த விழாவில், செவிலியர் பணி மேலாளர் ஆனந்தி வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி, மருத்துவமனைத் தலைவர் முனைவர் ஜி.வி.சம்பத் பேசியதாவது:

மருத்துவச் சேவை

சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை புன்முறுவலுடன் அணுகி அவர்களின் நோயை அறிந்து மருத்துவர்களோடு இணைந்து சேவை செய்வது செவிலியர்களின் பணியாக உள்ளது. செவிலியர் பணி என்பது மருத்துவச் சேவையின் இதயமாக கருதப்படுகிறது.

நோயாளிகளுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு நோயாளிகளை அதற்கு தயார்படுத்தி, அறுவை சிகிச்சை செய்யும்போது மருத்துவர்களுடன் இணைந்து செயலாற்றுபவர்கள் செவிலியர்களே.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்து செல்லும் வரை அவர்களை முழுமையாக கவனித்துக் கொள்வது வரை செவிலியர்களின் பணி இன்றியமையாததாக உள்ளது.

எனவே, மருத்துவச் சேவையில் செவிலியர்களின் பணியை போற்றும் வகையில் அவர்களுக்கு விழா நடத்துவது ஒரு நாள் மட்டும் அல்லாமல் ஆண்டு முழுவதும் அவர்களை கொண்டாட வேண்டும் என்றார். மருத்துவக் கண்காணிப்பாளர் ஜேக்கப் ஜோஸ் நன்றி கூறினார்.

மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் திலிப் மத்தாய், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொது மேலாளர் நிதின் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img