காட்டுமன்னார் கோவிலில் உள்ள எம்.ஆர்.கே. பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. கல்லூரித் தலைவர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் வரவேற்றார்.
நிர்வாக அதிகாரி இ.கோகுல கண்ணன், மேலாளர் கே.விஸ்வநாத்ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கே.ஆனந்த வேலு ஆண்ட றிக்கை வாசித்தார். விழாவை எம்.ஆர்.கே நினைவு கல்வி அறக்கட்டளை அறங்காவலர் எம்.ஆர். தெய்வசிகாமணி தொடங்கி வைத்தார்.
கல்லூரி நிறுவனரும், மாநில வேளாண்மைத் துறை அமைச்சருமான எம். ஆர்.கே. பன்னீர் செல்வம் விழாவுக்கு தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், மாணவர்கள் இளம் வயதில் கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும். இந்த விழாவில் 2.635 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர்.
வேலை வாய்ப்பு முகாம்கள்
கல்லூரியில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 1,995 மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் வி.கீதாலட்சுமி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
உடல் ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்கும் வகையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். நிகழாண்டு புதிய 23 பயிர் ரகங்களை அறிமுகம் செய்துள்ளோம்.நெல்லில் மட்டும் 4 புதிய ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.உதவி பேராசிரியர் ஏ.சிவப்பிரியா நன்றி கூறினார்.



