தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் செல்லியம்பட்டி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம், நடைபெற்றது.
கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதிக்கப்பட்டது. செல்லியம்பட்டி கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொது செலவினங்கள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, சிறுதானிய உற்பத்தி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பாரத்நெட் இணையதள வசதி உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 251 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைகூட்டம் நடைபெற்றன. ‘பாரத்நெட் என்ற இணையதள வசதியினை தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பாக அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் அறிவுரையின்படி, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கும், படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த ‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைத்து நடத்திட ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பைகளை முற்றிலும் பயன்படுத்தக்கூடாது.
வெளியில் கழிவுநீர் ஓடைகளிலோ அல்லது பொது இடங்களிலோ குப்பையை கொட்டுவது, நெகிழிப்பைகளை தூக்கி எறிவது போன்ற செயல்களை செய்யக்கூடாது. கடைகளுக்கு பொருள்கள் வாங்கச் செல்லும் போது மீண்டும் மஞ்சப்பை என்பதை நினைவில் கொண்டு துணிப்பைகளை எடுத்துசெல்ல வேண்டும்.
மழைநீர் சேமிப்பு இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்து மழைநீர் சேகரிப்பதன் மூலம் மண்வளம் மேம்படுவதோடு, நிலத்தடி நீர் மட்டமும் உயரும். பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.
நலத்திட்டங்கள்
தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், தருமபுரி மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
அத்தகைய திட்டங்களை கடைக்கோடி கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியினை மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. கிராமங்களின் வளர்ச்சி மிக முக்கியமான ஒன்றாகும்.
அந்த வகையில் கிராமங்களின் வளர்ச்சிக்கு அரசு செயல்படுத்தி வருகிற திட்டங்களை பொதுமக்களும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என மாவட்ட ஆட்சியர் கிராம சபை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
ஊராட்சித் தலைவர் ராஜா, குமுதா-வேல்முருகன், துணைத் தலைவர், சகாயராணி மகிமைநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர், சுமதி, ஊராட்சி செயலாளர், வார்டு உறுப்பினர்கள், செல்வம், காளியப்பன், மயிலா மாது, சக்தி, நாகம்மாள், தங்கவேல், சார்லி சுதந்திரம், கிளரா, பூபதி, அரசு அலுவலகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



