fbpx
Homeதலையங்கம்பெண்களுக்கு ரூ1,000 - சரித்திர சாதனையே!

பெண்களுக்கு ரூ1,000 – சரித்திர சாதனையே!

பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை செயல்படுத்தி மிகப் பெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய திராவிட மாடல் அரசு இப்போது மாதந்தோறும் பெண்களுக்கு ரூ1,000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்திருப்பது பெரும் வரவேற்புக்குரியதாகும்.

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற போது கையெழுத்திட்ட 5 கோப்புகளில் ஒன்று நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்பதுதான்.

இத்தகைய இலவச பயணத்தின் மூலம் பெண்களுக்கு அதுவரையிலான செலவுகளில் ரூ1,000 சேமிப்பாக கிடைத்தது. இது உழைக்கும் பெண்களுக்கு மிகப் பெரிய வரபிரசாதமாக கொண்டாடப்படுகிறது. இது நாட்டிலேயே மிகப் பெரிய முன்னோடித் திட்டமாகும்.

பெண்களுக்கான உரிமையை பேசுகிற இயக்கமாக திராவிடர் இயக்கம் இல்லாமல் நடைமுறைப்படுத்துகிற அரசாகவும் இருக்கிறது என்பதற்கு மேலும் ஒரு உதாரணமாக திகழ்ந்தது இந்த இலவச பயண திட்டம்.

இந்த சரித்திர சாதனையில் மற்றொரு மணிமகுடமாக பெண் களுக்கு மாதம் ரூ1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்கிற அறிவிப்புதான். இந்த அறிவிப்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:

சமூகத்தின் சரிபாதியான பெண்ணினத்தை – சரிநிகர் சமமாக உயர்த்த திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது திராவிட மாடல் அரசு.கல்வியில், நிர்வாகத்தில், அதிகாரம் மிக்க பொறுப்புகளில், பொருளாதாரத்தில், சமூகத்தில் பெண்களை உயர்த்தும் திட்டங்களைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும் போதெல்லாம் தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.

மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடும் அளித்தது முதல், இன்று அவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம்.

அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம். புதுமையான திட்டங்களை செயல்படுத்தியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மகளிருக்கு உரிமைத் தொகை தரப்படும் என்ற இந்த வாக்குறுதியையும் உறுதியாக நிறைவேற்றிட வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

அதன் அடிப்படையில், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பதைத் தொடர்ந்து மாதம் ரூ1,000 உதவி தொகை என்பது நிச்சயம் சரித்திர சாதனைதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இந்த திட்டத்தை குடும்பத் தலைவிகள் கொண்டாடி வரவேற்பதோடு, செப்டம்பர் மாதத்திற்காக காத்திருக்கிறார்கள்.

திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img