ஒன்றியத்தில் ஆளும் கட்சியான பாஜகவை எதிர்த்து அரசியல் செய்யும் தகுதியான தேசியத் தலைவர் யாரென்று கேட்டுப்பாருங்கள்.
அந்த ஒருவர் தற்போதைக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி தான். பாஜக அரசை எதிர்கொள்ளும்… தைரியமாக விமர்சிக்கும் தலைவராகவும் அவர் திகழ்கிறார். அமலாக்கத்துறை ரெய்டு, விசாரணையைக் கண்டு அஞ்ச மாட்டேன் என சூளுரைக்கிறார்.
காங்கிரஸ் பலவீனமாக இருப்பதாக ஒரு தோற்றம் உருவாகி இருக்கிற-து. அதனை மீட்டு நிலைநிறுத்தும் முயற்சியாக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தேச ஒற்றுமை பயணம் என்ற பாதயாத்திரையை மேற்கொள்ள இருக்கிறார்.
சுமார் 150 நாட்கள் 12 மாநிலங்களில் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதற்கான தொடக்க விழா நாளை (7ம் தேதி) கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடக்க உள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைக்கிறார்.
இந்த 150 நாள் பாத யாத்திரை மூலமாக ராகுல் காந்தி ஒரு கோடி மக்களை சந்திக்க திட்டம் தீட்டியுள்ளார். ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரை காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் பூசலையும், பொதுமக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கென செல்வாக்கையும் நிலைநிறுத்தும் என்று காங்கிரஸ் கட்சியினர் நம்புகிறார்கள்.
பாஜகவுக்கு எதிரான இந்த யாத்திரை காங்கிரசுக்கு பலன் அளிக்குமா? பாஜகவின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை 2024 பொதுத் தேர்தல் வரை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மீண்டும் ஒன்றியத்தில் யார் ஆட்சி மலரப்போகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆளுங்கட்சியான பாஜக அரசு எனும் அவிழ்த்து விடப்பட்ட (மெஜாரிட்டி) குதிரைக்கு கடிவாளம் போடும் வகையில் காங்கிரஸ் கட்சி வலுப்பெற வேண்டும்.
அப்போது தான் நாடாளுமன்ற ஜனநாயகம் தழைக்கும்.
ராகுல்காந்தியின் பாதயாத்திரை வெற்றி பெறட்டும்!



