தூத்துக்குடி மாவட்டத்தில் நாளது தேதி வரை 296 பயனாளிகளுக்கு ரூ.51.78 இலட்சம் மதிப்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கைம்பெண் கடன் திட்டத்தில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளன.
ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், நலிவுற்ற விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பல்வேறு தரப்பிலான மக்கள் பயனடையும் விதமாக நலத்திட்ட உதவிகள், நலத்திட்டங்கள் அறிவித்து முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் வழியொற்றி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அதன் ஒரு பகுதியாக, கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வாயிலாக கே.சி.சி.பயிர்க்கடன், கே.சி.சி.கால்நடை பராமரிப்பு கடன், கே.சி.சி.மீன்வளம், தங்க நகைக்கடன், மாற்றுத்திறனாளி கடன், சுய உதவிக்குழு கடன்கள், கறவைமாடுகள் வளர்த்தல் செம்மறி ஆடு, வெள்ளாடு மற்றும் கோழி வளர்ப்பு, பால் பண்ணை அமைத்தல் ஆகியவற்றிற்கு மத்திய கால கடன்கள் உள்ளிட்ட கடன்களை வழங்கி, பொதுமக்களின் பொருளாதாரம் உயர வழி வகை செய்துள்ளார். விவசாய நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வாயிலாக உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக சட்டமன்ற பேரவையில் 2021-22-ம் ஆண்டிற்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையில் கூட்டுறவுத் துறை அமைச்சர், கூட்டுறவுத்துறை மூலம் தமிழகத்தில் உள்ள கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மிகவும் குறைந்த வட்டியான 5% வட்டியில் அவர்களின் பொருளாதார நிலை உயர கடன் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
5% வட்டி
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கைம்பெண்கள், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட கைம்பெண்கள் ஆகியோருக்கு கைம்பெண் கடன் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ரூ.4 ஆயிரத்துக்கும் குறைவான மாத வருமானம் உள்ள அனைத்து கைம்பெண்கள், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட கைம்பெண்கள் ஆகியோருக்கு மிகவும் குறைவான 5% வட்டி கொண்ட இக்கடன் திட்டத்தினை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
கடன் தொகை குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். இக்கடன் தொகையினை அதிகபட்சமாக 120 நாட்களுக்குள் மாதமிருமுறை என்ற அடிப்படையில் கடன் தொகை திருப்பி செலுத்தப்பட வேண்டும்.
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 26 கிளைகளிலும் இக்கடன் திட்டம் துவங்கப்பட்டு நாளது தேதி வரை 296 பயனாளிகளுக்கு ரூ.51.78 இலட்சம் மதிப்பில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இக்கடன் திட்டத்தில் பங்கு பெற தேவையான ஆவணங்களான விதவைச்சான்று, விண்ணப்பதாரர் மற்றும் பிணையதாரரின் ஆதார் கார்டு மற்றும் ஸ்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவுள்ள 2 புகைப்படம் ஆகியவற்றை அருகில் உள்ள தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் சமர்ப்பித்து கிளை மேலாளரை அணுகி கடன் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்.
“சமுதாயத்தில் தலைநிமிர்ந்தேன்”
கைம்பெண் கடன் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளி கயத்தார் வட்டம் தெற்கு இலந்தகுளம் கிராமம் கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த இந்திரா தெரிவித்ததாவது:
என் கணவர் பெலிக்ஸ். இரு குழந்தைகள் உள்ளனர். 2021ல் கொரோனா தொற்றுநோய் தாக்குதலில் கணவர் உயிரிழந்தார்.
அதன்பின்னர் வாழ்வாதாரம் இன்றி தவித்தேன். அப்போது தமிழக அரசு கொரோனா நோயானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்க ஆணையிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து கயத்தார் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நிவாரண உதவி பெறச் சென்றேன். வட்டாட்சியர் என்னுடைய, தன் குறிப்பை பார்த்துவிட்டு, பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி என்பதால், சுயதொழில் தொடங்க கைம்பெண் கடன் பெறலாம் என ஆலோசனை வழங்கினார்.
நான் தொடக்க வேளாண்மை சங்கத்திற்கு சென்று, கைம்பெண் கடன் திட்டத்திற்கு விண்ணப்பித்தேன். ரூ.25 ஆயிரம் கடன் பெற்று தையல் மெஷின் வாங்கி வீட்டில் தையல் தொழில் செய்கிறேன். கிடைக்கும் வருமானத்தில் தாய், குழந்தைகள் இருவரையும் காப்பாற்றி வருகிறேன். இத்திட்டத்தினால் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்க முடிகிறது. இத்திட்டத்தினை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
“சிறு முதலாளி ஆகிவிட்டேன்”
கயத்தார் வட்டம் கடம்பூர் பேரூராட்சி சொக்கலிங்கபுரம் பகுதி அருந்ததி (வயது 46) தெரிவித்ததாவது: கணவர் குருசாமி. எங்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 2012-ம் ஆண்டில் கேன்சர் நோய் பாதிப்பால் கணவர் இறந்துவிட்டார். விதவை இடஒதுக்கீட்டில் ஏதேனும் அரசு வேலைவாய்ப்பு கிடைக்குமா என்று கடந்த 2012-ம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்து, முயற்சித்து வந்தேன்.
கிடைக்காததால், விவசாயிக் கூலி வேலைக்கு சென்றேன்.
இரண்டு பெண் குழந்தைகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தேன். மகன் தற்போது கூலி வேலை செய்து வருகிறார்.
வறுமையான சூழல் காரணமாக மீண்டும் அரசு பணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க சென்றபோது, வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சுயதொழில் தொடங்க கடன் வழங்குவதாக அலுவலர் தெரிவித்தார். அதன்படி விண்ணப்பித்தேன்.
அரசின் நலத்திட்டத்தில் நிதி ரூ.10 ஆயிரம் கிடைக்கப் பெற்று சொக்கலிங்கபும் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறேன். இதில் கிடைக்கும் வருமானத்தில் வறுமை நீங்கி கடன் சுமையின்றி சமுதாயத்தில் சிறு முதலாளியாக வாழ்ந்து வருகிறேன். இத்திட்டத்தினை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொகுப்பு:
இரா. ஜெய அருள்பதி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
(முழு கூடுதல் பொறுப்பு)
எஸ்.செல்வலெட் சுஷ்மா,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
தூத்துக்குடி மாவட்டம்.



