1957-ம் ஆண்டிலிருந்து கண் பராமரிப்பு சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற முன்னோடி என அறியப்படும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சென்னையில் குரோம்பேட்டையில் மிக நவீன கண் சிகிச்சை மருத்துவமனையை துவக்கி உள்ளது.
குரோம்பேட்டை பேருந்து நிலையத்திற்கு பின்புறத்தில், ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள இம்மருத்துவமனையில் செப்டம்பர் 30 வரை, இலவச கண் மருத்துவ கலந்தாலோசனை வழங்கப்படுகிறது.
விழாவில், நடிகர் ஆர்ஜே பாலாஜி பேசியதாவது:
குரோம்பேட்டையில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் புதிய மருத்துவ மையத்தை தொடங்கி வைப்பதும், என் கண்களை தானம் செய்வதும் எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை தருகிறது. உடலில் மிக முக்கியமான, அதிக வளர்ச்சி பெற்ற புலனுறுப்பாக இருப்பது கண்களே.
ஆனால், பார்வைத்திறன் இழந்தவர்களாக இருப்பதால் அழகான உலகையும், இயற்கை அதிசயத்தையும் காண்பதற்கான தங்களது வாய்ப்பை பலர் இழந்து தவிக்கின்றனர்.
இறப்புக்குப் பிறகு கண்களை தானமாக வழங்குவதன் மூலம், பார்வைத்திறனின்றி பரிதவிக்கும் அவர்களுக்கு பார்வைத்திறனை வழங்குவது சாத்தியம். ஆகவே, கண்களை இறப்பிற்கு பிறகு தானமாக வழங்க ஒவ்வொருவரும் ஆர்வத்தோடு முன்வந்து வாக்குறுதியை வழங்க வேண்டும் என்றார்.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் மற்றும் முதுநிலை கண் நிபுணர் டாக்டர் ஸ்ரீனிவாசன் ஜி.ராவ் கூறியதா வது: தற்போது சென்னை மாநகரில் மட்டும் 17 கண் மருத்துவ மையங்களை நடத்தி வருகிறோம்.
இந்த மையம் தொடங்கப்பட்டிருப்பதன் மூலம், இந்தியாவெங்கிலும் மற்றும் ஆப்ரிக்காவிலும் பல்வேறு இடங்களில் 119 மருத்துவமனைகளை மொத்தத்தில் உள்ளடக்கிய ஒரு மாபெரும் வலையமைப்பை கொண்டிருக்கிறோம் என்றார்.
பல்லாவரம் எம்.எல்.ஏ. இ. கருணாநிதி, பல்லாவரம் மண்டலத் தலைவர் இ. ஜோசப் அண்ணாதுரை, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, குரோம்பேட்டை மற்றும் மருத்துவ சேவைகளின் தலைவர் டாக்டர் எஸ். வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



