தஞ்சாவூர் மாவட்டத்தில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், முதற்கட்டமாக 310.5 ஏக்கர் நிலங்களில் 14 தரிசு தொகுப்புகள் கண்டறியப்பட்டன. 200 பண்ணை குடும்பங்களுக்கு 43,800 தென்னை கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக மக்களுக்காகவும், அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் வரலாற்றில் பேசப்படுகின்ற வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தீட்டி அதனை சிறப்பாக செயல்படுத்திய முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் வழியிலே செயல்பட்டு வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களின் எண்ணங்களை நிறைவேற்றித் தந்து சிறப்பான முறையில் மக்கள் சேவை செய்து வருகிறார்.
கடந்த 23-05-2022 அன்று வேளாண்மை -உழவர் நலத்துறை சார்பில் 1,997 கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள 9 இலட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
தன்னிறைவு கிராமங்கள்தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க, முதல் வேளாண்மை நிதி நிலை அறிக்கையை 14-08-2021 அன்று வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் சட்டசபையில் தாக்கல் செய்தபோது, ஐந்து ஆண்டுகளில் தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இச்சீரிய திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களும் ஒட்டுமொத்த வளர்ச்சியடைந்து தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற வேண்டும் என்பதே நோக்கமாகும்.
சாகுபடியை உயர்த்த முதல்வரின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டமான 11.75 இலட்சம் எக்டேர் நிலங்களை கூடுதலாக சாகுபடிக்கு கொண்டு வருதல், இருபோக சாகுபடி பரப்பினை 20 இலட்சம் எக்டராக உயர்த்துதல், உணவு தானியங்கள் மற்றும் தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, நிலக்கடலை பயிர்களின் ஆக்கத்திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தல் ஆகிய தொலைநோக்குத் திட்டங்களை அடைந்திடும் வகையில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
2021-2022-ம் ஆண்டில் 1,997 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின்கீழ் தென்னங்கன்றுகள், பயறுவகை விதைகள், தெளிப்பான்கள், வீட்டுத் தோட்டம் அமைக்க காய்கறி தொகுப்புகள், தோட்டக்கலை பயிர்சாகுபடிக்கு ஊக்கத் தொகை பழக்கூடைகள் மற்றும் ட்ரம் பழச்செடிகள், மரக்கன்றுகள் தொகுப்புகள், தரிசு நிலத் தொகுப்புகளில் ஆழ்துளை\குழாய்க்கிணறு அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், சிறுபாசன குளங்கள், குளங்கள், ஊரணிகள், வரத்து கால்வாய்கள் தூர்வாருதல் போன்ற செயல்பாடுகள் இக்கிராமப் பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்படும்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை முதல்வர் தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு தரிசு தொகுப்பிற்கு உட்பட்ட விவசாய சங்க உறுப்பினர்களுக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்திட பணி ஆணை, தென்னங்கன்றுகள், தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்திட ஊக்கத்தொகை, வரப்பு ஓரங்களில் பழச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டிட ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் கிணறு அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைப்பதற்கான பணி ஆணை, பண்ணைக்குட்டை அமைப்பதற்கான ஆணை, அக்ரி கிளினிக் அமைக்க ஆணை ஆகியவற்றை வழங்கினார்.
சிறப்பாக செயல்படும் 73 கிராம பஞ்சாயத்துகள்
இத்திட்டம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது முதற்கட்டமாக 2021-22-ம் ஆண்டு 73 கிராம பஞ்சாயத்துகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இத்திட்டமானது ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்க அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் செயல்படும் மாபெரும் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு சாகுபடி நிலமாக மாற்றப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 310.5 ஏக்கர் நிலங்களில் 14 தரிசு தொகுப்புகள் கண்டறியப்பட்டு அதில் உள்ள முற்புதர்களை அகற்றி, திருத்தம் செய்து வேளாண் பொறியியல் துறையுடன் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் ஒரு பண்ணை குடும்பத்திற்கு மூன்று தென்னை மரக்கன்றுகள் வீதம் ஒரு கிராமத்திற்கு 200 பண்ணை குடும்பங்களுக்கு 43,800 தென்னை கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.
தெளிப்பான்கள் வரப்பு பயிரை ஊக்குவிக்கும் வகையில் கிராமங்களில் ஒரு எக்டருக்கு 5 கிலோ உளுந்து விதைகள் மானியத்தில் கொடுக்கப்பட்டு, ஒரு கிராமத்திற்கு 15 எக்டர் வீதம் வரப்பு பயிர்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு கைத்தெளிப்பான்கள் மற்றும் விசைத்தெளிப்பான்கள் ஒரு கிராமத்திற்கு ஐந்து வீதம் கொடுக்கப்பட்டு மொத்தம் 730 தெளிப்பான்கள் 50% மானியத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
தோட்டக்கலைத் துறையினரால், வீட்டு தோட்டம் அமைவதற்கான நெகிழிக்கூடைகள் பிளாஸ்டிக் டிரம் மற்றும் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க வரப்பு ஓரங்களில் பல வகையான செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
வேளாண் பொறியியல் துறை மூலம் ஆழ்துளைக் கிணறுகள், பண்ணை குட்டைகள், தூர்வாருதல் போன்ற பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.கால்நடைகளின் நலம் காத்து பால் உற்பத்தியினை பெறுகிற கால்நடைத் துறையின் மூலம் கால்நடை மருத்துவ முகாம்கள் மற்றும் புதிய பால் சொசைட்டிகள் உருவாக்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடுதலாக 80 சதவீத இதர திட்டங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட கிராம பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு கிராம பஞ்சாயத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் திட்டமானது சிறப்பாக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
“22 ஏக்கர் தரிசு நிலம்”தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டாரம் தோப்பு விடுதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரதாபாஸ் தெரிவித்ததாவது:
முதல்வர் அறிவித்த கலைஞரின் திட்டத்தின் கீழ் தரிசு தொகுப்பு குழு 22 ஏக்கர் தரிசு உள்ளது. நீர் ஆதாரம் இல்லாததால், நீண்ட நாள் தரிசாக இருந்தது. இந்நிலையில், தரிசு தொகுப்பு குழு அரசு திட்டத்திற்கு தேர்வு செய்து அரசு ஒதுக்கி ஆழ்துளை அமைப்பதற்கு விவசாயி ஒரு சென்ட் நிலத்தை வேளாண்மை உதவி இயக்குநருக்கு தான பத்திரம் எழுதி கொடுத்ததினால், தோப்பு விடுதி தரிசு தொகுப்பு குழுவிற்கு அலுவலர் 62 அடி கிணறு அமைத்து கொடுத்தார்.
இதனால் நீண்ட நாள் தரிசாக கிடந்த இடத்தை விவசாய நிலமாக கொண்டு வர முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தினை அறிமுகம் செய்த தமிழக முதல்வருக்கு என் குடும்பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.



