2006 முதல் 2016 வரை பத்து ஆண்டுகளில் 340 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 62 மாணவர்கள் சேர்க்கப்பட்ட 2007ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளுக்கு சிறந்த ஆண்டாக இருந்தது. மோசமான ஆண்டு 2013, வெறும் 18 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இதேபோல், 2007 முதல் 2016 வரையிலான பத்தாண்டுகளில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 74 மாணவர்கள் உதவி பெறும் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர். 2014 ல் 12 மாணவர்கள் சேர்க்கப்பட்டதைத் தவிர, ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கை ஒற்றை இலக்கத்தில் இருந்தது.
2017ல், இரண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 2018–19 மற்றும் 2019&-20 ஆம் ஆண்டில், நீட் தேர்வின் மூலம் தகுதி பெற்ற சுமார் 700 அரசுப் பள்ளி மாணவர்களில், ஒன்பது பேர் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நீட்) கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, அப்போதைய தமிழக அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டம் இயற்றியது.
2020 ஆம் ஆண்டில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5% இடஒதுக்கீட்டை மாநில அரசு கொண்டு வந்ததன் மூலம் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரும் தங்கள் கனவை நனவாக்க முடிந்தது.
இந்த ஆண்டு கூடுதல் மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டதால் 437 எம்பிபிஎஸ் இடங்கள், 107 பிடிஎஸ் (பல் மருத்துவம்) இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் பரவலாக பல இடங்களில் ஒரே பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் ஐந்தாறு பேருக்கு எம்பிபிஎஸ் இடம் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக கிராமப்புற பள்ளிகளில் படித்தவர்களின் எம்பிபிஎஸ் கனவும் நனவாகி இருப்பது பாராட்டத்தக்கது. அதிலும் தேர்வான மாணவ மாணவிகளில் பெரும்பாலானவர்களின் பெற்றோர் ஏழை விவசாயிகள், கூலித் தொழிலாளர்களாக உள்ளனர்.
இதன் மூலம் அரசு பள்ளிகளுக்கு தமிழகத்தில் மவுசு கூடி உள்ளது. அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இது வரவேற்கத் தக்கது. அதே நேரத்தில் அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை மேலும் மேம்படுத்த சிலபல நடவடிக்கைகளும் தேவைப்படுகிறது.
அதற்கான முயற்சிகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. என்றாலும் மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு இணையானதாக அரசு பள்ளிகளை மாற்றிக்காட்ட வேண்டும்.
கல்விப் புரட்சி வெடிக்கட்டும்!



