fbpx
Homeபிற செய்திகள்மனித - யானைகள் மோதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மனித – யானைகள் மோதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வருவாய் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, மின்சாரம் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை ரயில்வே துறை, மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களுக்கான மனித யானைகளின் முரண்பாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு வனத் துறை கோவை வனக் கோட்டம், ஜூ அவுட்ரீச் அமைப்பு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.

நேற்று தமிழ்நாடு வனவியல் அகாடமியில் நடந்த நிகழ்வில் தமிழ்நாடு வனத்துறையினர், பல்வேறு துறைகளில் இருந்து சுமார் 120 பேர் கலந்து கொண்டனர்.

மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார் வரவேற்று, மனித யானை மோதலின் தீவிரம் மற்றும் கூட்டத்தின் அவசியம் குறித்து பேசினார். ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனப் பாதுகாவலரும் கள இயக்குனருமான எஸ். ராமசுப்ரமணியம் தொடக்க உரையாற்றினார்.

அவர், கோவை வட்டத்தில் தனது கடந்த கால மற்றும் தற்போதைய மனித யானை மோதல் போக்கைப் பகிர்ந்து கொண்டார்.

கோவை கலெக்டர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமை தாங்கிப் பேசுகையில். மனித – யானை மோதலுக்கான காரணத்தையும், மோதல் பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்களின் மனப்பான்மை மாற்றத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

உதகமண்டலம் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர். பி.ராமகிருஷ்ணன், “வனப் பாதுகாப்பில் யானைகளின் முக்கியத்துவம் மற்றும் மனித யானைகளின் தொடர்புக்கான காரணங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இந்தோ-அமெரிக்கன் வன விலங்கு சங்கத்தின் நிர்வாக அறங்காவலர் டாக்டர். சி.அறிவழகன், “மனித வன விலங்கு தொடர்புத் தணிப்பு நடவடிக்கைகள்-அனுபவங்கள் மற்றும் மேலாண்மை உத்திகள்” என்ற தலைப்பில் விரிவுரை ஆற்றினார்.

“மனித யானைகளின் தொடர்பு குறித்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் எதிர்பார்க்கப்படும் பங்கு” என்ற தலைப்பில் கோவை இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவர் என்.ஐ.ஜலாலுதீன் சிறப்புரையாற்றினார்.

கோயம்புத்தூர் ஜூ அவுட்ரீச் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் பி.ஏ.டேனியல் மற்றும் ஆர்.மாரிமுத்து ஆகியோர் பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட உள்ளீடுகளைக் கொண்டு செயல் திட்டத்தை வடிவமைத்து உருவாக்க வதற்கான நோக்கத்துடன் “மனித – யானைகளின் தொடர்பு குறித்த குடிமக்கள் விவாதம்” என்ற குழு விவாதம் அமர்வை நடத்தினர். முடிவில் உதவி வன பாதுகாவலர் சி.தினோஸ் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img