நாட்டின் முதுகெலும்பான வேளாண் துறையில் பசுமை புரட்சி மூலம் இந்தியா அடைந்த அபரிமிதமான வளர்ச்சியை உலகமே வியந்து பார்க்கிறது. அதேநேரத்தில் இயற்கை வேளாண்மையின் சுவடுகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோகும் நிலை உருவானது.
இந்தியா முழுவதும் ஓராண்டில் சுமார் ஒரு லட்சம் டன் நஞ்சு (ரசாயன உரம்) விளைநிலத்தில் கொட்டப்படுகிறது. நாட்டின் அடிப்பரப்பு, மேற்பரப்பு என கிடைக்கும் தண்ணீர் விஷமாக மாறி விட்டது. அதனால் புற்றுநோயாளிகள் அதிகரித்தபடி உள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் இயற்கை வேளாண்மையை மீட்டெடுக்க இயற்கையின் தூதனாய் வந்தார் நம்மாழ்வார். தமிழகத்தில் இன்று படிப்படியாக வரவேற்பைப் பெற்று வரும் இயற்கை விவசாயத்தின் தந்தை நம்மாழ்வார் என்றால் மிகையல்ல.
இன்று தமிழகத்தில் பாரம்பரிய இயற்கை விவசாயம் தொடர்பாக ஏற்பட்டுள்ள அனைத்து விழிப்புணர்வுக்கும், வரவேற்பிற்கும் காரணம் அவர் தான். தமிழகம் முழுக்க பல்லாயிரக்கணக்கான இயற்கை விவசாயிகளை உருவாக்கினார்.
ஆனாலும் இன்றைக்கு இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் எண்ணிக்கையை ஒப்பிட்டால் இவர்கள் ஆயிரக்கணக்கில் என்றால் அதனைப் புறக்கணிக்கும் விவசாயிகள் லட்சக்கணக்கில் உள்ளனர்.
இந்த நிலை மாற வேண்டிய காலகட்டம் வந்து விட்டது. இயற்கை விவசாயத்தை கவ்விப்பிடிக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. இதனை தற்போது சொன்னது யார் தெரியுமா? நமது பிரதமர் மோடி தான்.
இயற்கை விவசாயம் தொடர்பான தேசிய மாநாட்டில் அவர் பேசுகையில், விவசாயத்தின் அங்கமாக மாறி விட்ட பயிர்க்கழிவுகள் எரிப்பு மற்றும் ரசாயன உரங்கள் பயன்பாடு போன்றவற்றைச் சரிசெய்வதற்கான நேரம் இது.
விவசாயத்தை ரசாயன ஆய்வகத்தில் இருந்து வெளியேற்றி இயற்கை ஆய்வகத்துடன் இணைக்க வேண்டியது அவசியம். அறிவியல் அடிப்படையிலான இயற்கை விவசாயமாக மாற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
என்றாவது ஒரு நாள் வேறு வழியே இல்லாமல் இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகள் தள்ளப்படுவார்கள் என்பது விதிக்கப்பட்ட விதி. அதனைத் தெரிந்து தான் பிரதமரே சரியான தீர்வை முன்னெடுத்து இருப்பது பாராட்டுக்குரியது. இந்த முயற்சி படிப்படியாக வெற்றி பெறவேண்டும்.
விவசாயிகளும் ஒட்டுமொத்த நாட்டின் நலன் கருதி அர்ப்பணிப்புடன் இயற்கை வேளாண்மைக்கு மாற முயற்சிக்க வேண்டும்; முயற்சி திருவினை ஆக்கும்!



