ஜனநாயக நாட்டில் நியாயமான போராட்டத்துக்கு தாமதமானாலும் வெற்றி உறுதி என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் விவசாயிகள். டெல்லியில் தொடங்கிய போராட்டம் நாள் கணக்கில் நீடித்தது… மாதக்கணக்கில் தொடர்ந்தது.
விவசாயிகளால் தாக்குப்பிடிக்க முடியாது என பலரும் நினைத்தார்கள். ஆனால் வீறுகொண்ட போராட்டம் ஓராண்டை கடந்து அதே மன உறுதியுடன், அதே எண்ணிக்கையுடன் தொடர்ந்தது.
தாக்குப்பிடிக்க முடியாத மத்திய அரசு, 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றது. வெற்றிக்குப் பின்னால் விவசாயிகள் மகிழ்ச்சியோடு வீடு திரும்பி இருக்கிறார்கள்.
போராட்டத்தின்போது 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு பஞ்சாப் மாநில அரசு நிதி உதவி அளித்து இருக்கிறது.
இறந்தவர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சிகள் கோரின. ஆனால் விவசாயிகள் இறப்பு பற்றி எந்த தகவலும் இல்லை; அதனால் நிவாரணம் வழங்கும் பேச்சுக்கே இடமில்லை என ஒருமுறை அல்ல இருமுறை மத்திய அரசு அறிவித்து விட்டது.
கடந்த அக்டோபர் 3ம் தேதி லக்கிம்பூர் கேரியில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா பயணம் செய்த ஜீப் மோதி 4 விவசாயிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். உச்ச நீதிமன்றம் தலையிட்டதன் பேரில் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிலரை போலீசார் கைது செய்தனர்.
விவசாயிகள் கொல்லப்பட்டதில் ஆரம்பத்தில் இருந்தே தனது மகனுக்குத் தொடர்பில்லை என இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறிவந்தார். புகாருக்கு ஆளான அவர் தாமாக முன்வந்து பதவி விலகி இருக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தும் மறுத்து விட்டார். இந்த விவகாரத்தில் நடைபெறும் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் ஜெயின் மற்றும் மேலும் 3 மூத்த போலீஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.
லக்கிம்பூர் வன்முறை நிகழ்வு குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக்குழு, விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் விபத்தல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயல் என்று தெரிவித்துள்ளது.
இந்த வன்முறையில் ஈடுபட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட கைது செய்யப்பட்ட 13 பேர் மீதும் குற்றம்சாட்டப்பட வேண்டும் என்றும் இக்குழு உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
திட்டமிட்டே கொலைகளை அரங்கேற்றியதாக விவசாயிகள் கூறிய புகார், இப்போது உண்மையாகி இருக்கிறது. இனி என்ன செய்யப்போகிறார், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா அல்லது பதவியில் ஒட்டிக் கொண்டு இன்னும் மகனைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடப் போகிறாரா? இந்த கொடூர கொலை விவகாரத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தி உள்ளது.
விரைவில் விவசாயிகளுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே நியாயமான தீர்ப்பு கிடைக்கும். காத்திருப்போம்!



