ஒன்றிய இடைநிலை கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத் தேர்வுக்கான வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள ஒரு கேள்வி- இந்திய அளவில் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது.
அந்தத் தேர்வுத் தாளில் ஒரு சொற்றொடர் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்த நிலையில், தற்போது அவ்வாறு இல்லாததால் அதைக் காணும் குழந்தைகள் மற்றும் வீட்டுப் பணியாளர்களிடம் ஒழுங்கீனம் ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவிக்கு அதிகாரம் அதிகம் கொடுத்துள்ளதால் பிள்ளைகளின் ஒழுக்கம் பாதிக்கப்படுவதாக அமைந்துள்ள இந்த சொற்றொடர் வடிவிலான வினா பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மேலும் அந்த சொற்றொடருக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று வினா கேட்டு, பதில் தர 4 வாய்ப்புகளையும் (சாய்ஸ்) தந்துள்ளனர். அந்த வாய்ப்புகள் இதோ: 1. குழந்தைகளின் ஒழுங்கீனத்துக்கு யார் பொறுப்பு? 2. வீட்டில் ஒழுக்கம் சீர்கெட என்ன காரணம்? 3. வீட்டில் குழந்தைகள், பணியாளர்களுக்கான இடம். 4. குழந்தைகள் உளவியல்.
இந்த வினாவின் மூலம் பத்தாம் வகுப்பு படிக்கும் வளர்இளம் பிள்ளைகளுக்கு தவறாக பாலின அடிமைத்தனத்தைக் கீழ்படிதல் போல கற்பிக்கப்பட்டுள்ளதோடு பெண் விடுதலையை அவமதிப்பதாக உள்ளது என்பதே முக்கிய குற்றச்சாட்டு.
தற்போது- இந்த பிழையான கற்பிப்பு முயற்சிக்கு இந்திய அளவில் அனைத்துத் தரப்பிலிருந்தும் கண்டனக் கணைகள் பாய்ந்தவண்ணம் இருக்கிறது.
இதுதொடர்பாக, பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் சோனியாகாந்தி இந்த சிக்கல் குறித்து பேசும்போது, ‘தவறான கேள்வி கேட்டதற்கு ஒன்றிய பாஜக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்‘ என்று குறிப்பிட்டார்.
மேலும் இந்த சர்ச்சையான கேள்விக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட எம்.பிக்கள் பலரும் தங்களின் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
இந்த தவறானக் கற்பித்தல் முன்னெடுப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதன் எதிரொலியால், நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று, 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய அந்த வினா நீக்கப்படுவதாக ஒன்றிய இடைநிலைக்கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
வினாவையும் அதற்குப்பதிலாக தரப்பட்ட பதில் பட்டியலையும் படிக்கும் சாதாரண மக்கள் கூட அதில் உள்ள குதர்க்கத்தை புரிந்து கொள்வார்கள். இது ஏன் அந்த வினாத்தாளைத் தயாரித்த மேதாவிகளின் மனதில் படவில்லை?. தவறுகள் நடப்பதுண்டு.
ஆனால் நாடு முழுவதும் பெண் இனத்தைக் கேவலப்படுத்தும் சர்ச்சையை உருவாக்கும் தவறை… அந்த வினாவை எந்த மனநிலையில் தயாரித்தார்கள்? தயாரித்த வினாத்தாளை பார்வையிட்டு ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களாவது அதனை கண்டுபிடித்து திருத்தி இருக்கலாம்.
அதுவும் நடக்கவில்லை. கவனக்குறைவு என்றால் அதற்கு எல்லையே கிடையாதா? மேலும், அந்த வினாவிற்கு விடைஅளித்த மாணவர்கள் அனைவருக்கும் முழுமதிப்பெண் வழங்கப்படும் என ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? இதுபோன்ற தவறுகள் இனியாவது வினாத்தாள்களில் நடக்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் அவசியமோ, அதனையெல்லாம் செய்து உஷாராக இருக்க வேண்டும் என்பதற்கு ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு இந்த தவறு, ஓர் பாடமாக இருக்கட்டும்.
பள்ளி மாணவர்கள் மனதில் விஷ விதைகள் விதைக்கப்பட்டு விடக்கூடாது!



