fbpx
Homeதலையங்கம்‘ஒமைக்ரான்’ கொரோனா உலகிற்கு பேராபத்து

‘ஒமைக்ரான்’ கொரோனா உலகிற்கு பேராபத்து

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கக்கூடிய கொரோனா வைரஸ் தனது மரபணுவில் தொடர்ச்சியாக மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸாக தோன்றுகின்றது.

இதுவரை ஆல்பா, பீட்டா, டெல்டா போன்ற உருமாற்றங்கள் ஏற்பட்டு தற்போது டெல்டா வகை கொரோனா வைரஸ் பிரதானமான வகையாக திகழ்கிறது.
26 நவம்பர் 2021ல், உலக சுகாதார நிறுவனம், கொரோனா பி.1.1.529 உருமாற்றத்தை ‘ஓமைக்ரான்’ வகையாக அறிவித்தது.

மேலும் ‘ஓமைக்ரான்’ வகையை கவலைக்குரிய உருமாற்றமாகவும் அறிவித்துள்ளது. கொரோனா ‘ஓமைக்ரான்’ உருமாற்றத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி முதன்முதலில் தென்ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது.

போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹாங்காங், இஸ்ரேல், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட 15 நாடுகளில் ‘ஓமைக்ரான்’ வகை உருமாற்றம் கண்டறியப்பட்டுள்ளது.

‘ஓமைக்ரான்’ கொரோனா வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தன்மை, வேகமாக பரவுதல் மற்றும் வேகமாக செல்களுக்குள் ஊடுருவும் தன்மை போன்றவற்றைக் கொண்டதாக உள்ளதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இந்த உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக மாநில அரசுகளை பிரதமர் மோடி உஷார்படுத்தி உள்ளார்.

இதுவரை ‘ஓமைக்ரான்’ உருமாறிய கொரோனா தமிழ்நாட்டில் கண்டறியப்படவில்லை. இதனைச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதிப்படுத்தி உள்ளார். இது சற்று ஆறுதலைத் தந்தாலும் இந்த புதிய வைரஸ் இந்தியாவிற்குள்ளும் கால்பதித்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஓமைக்ரானை நாட்டுக்குள்ளேயே விடாமல் தடுக்க வேண்டியது மிகமிக அவசியமான பணியாக தற்போது மாறி உள்ளது. சர்வதேச விமான நிலையங்களில், ஓமைக்ரான் தொற்று பரவிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து, நெகட்டிவ் முடிவு வந்தால் மட்டுமே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.

மாதிரிகள் முழு மரபணு வரிசைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உருமாற்றம் உள்ளதா என கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது.

‘ஓமைக்ரான்’ உருமாற்றம் தொடர்பான உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், அதன் பாதிப்புகளை தடுக்க “கொரோனா தடுப்பூசி மட்டுமே சிறந்த ஆயுதம்” என்பதால், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இரண்டு தவணைகள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது முககவசம் அணிந்திருப்பவர்களை விட அணியாதவர்களே பொது இடங்களில் அதிகம் தென்படுகின்றனர். சமூக இடைவெளியை எங்கேயும் பார்க்க முடியவில்லை.

அடிக்கடி சோப்பு போட்டு அல்லது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தலும் மறைந்து போய் விட்டது. இவற்றையெல்லாம் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய காலக்கட்டாயம் ‘ஓமைக்ரான்’ மூலம் வந்துள்ளது.

தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் அன்றாடம் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அது தான் நமக்கும் குடும்பத்துக்கும் நாட்டுக்கும் பாதுகாப்பு தரும் ஒரே வழி.

படிக்க வேண்டும்

spot_img