fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்டத்தில் இலவச மின் இணைப்பு இலக்கு 6363 விவசாயிகள் இதுவரை பயன் பெற்றோர் 1235...

கோவை மாவட்டத்தில் இலவச மின் இணைப்பு இலக்கு 6363 விவசாயிகள் இதுவரை பயன் பெற்றோர் 1235 பேர் முதல்வருக்கு நன்றி செலுத்தும் உழவர்கள்

கோவை மாவட்டம் முழுவதும் 6363 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1235 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.


வேளாண்மை, தேசிய பொருளாதாரத்தின் உயிர்நாடி ஆகும். உணவுப் பாதுகாப்பில் நிலையான தன்மையை அடையவும், நாட்டு மக்களின் நலன் காக்கவும், வேளாண் வளர்ச்சி மிகவும் முக்கியமானதாகும்.


வேளாண்மைத் துறையின் மூலம் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


அதனடிப்படையில், எரிசக்தி துறையின்‌ 2021-2022-ம்‌ ஆண்டு மானியக்‌ கோரிக்கையில்‌ மாநிலத்தின்‌ விவசாய உற்பத்தியினை பெருக்கி, விவசாயிகளின்‌ நலனை மேம்படுத்தும்‌ நோக்குடன்‌ ஒரு இலட்சம்‌ புதிய விவசாய மின்‌ இணைப்புகள்‌ வழங்கப்படும்‌ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்தார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, உழவர்களுக்கு இலவச மின்சாரம்‌ வழங்கும் திட்டத்தை முதன்முதலில் அறிவித்தார்.


இதுவரை இல்லாத
அதிகபட்ச அளவு
அதனைத் தொடர்ந்து, தமிழகத்திலேயே முதன் முறையாக இதுவரையிலும்‌ இல்லாத அதிகபட்ச அளவாக இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ஒரு இலட்சம்‌ விவசாய மின்‌ இணைப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டு, தமிழ்நாடு மின்சார வாரியம், மின்‌ உற்பத்தி மற்றும்‌ மின்‌ பகிர்மானக்‌ கழகம், மின்‌ தொடரமைப்புக்‌ கழகம்‌ ஆகியவற்றின்‌ சார்பில்,‌ விவசாயிகளுக்கு ஒரு இலட்சம்‌ விவசாய மின்‌ இணைப்புகள்‌ வழங்கும்‌ திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்தார்.

இத்திட்டம்‌ ரூ.5,025 கோடி மதிப்பீட்டில்‌ மாநிலம்‌ முழுவதும்‌ செயல்படுத்தப்பட்டுள்ளது.


அதன்படி, கோவை மாவட்டம் முழுவதும் 6363 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் (24.11.2021) இதுவரை 1235 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.


முகத்தில் மலர்ச்சி
இலட்சக்கணக்கான உழவர்களின்‌ முகத்தில்‌ மலர்ச்சியை உருவாக்கக் கூடிய வகையில்‌ ஒரு திட்டமாக, இந்தத்‌ திட்டம்‌ அமைந்துள்ளது.

அதிலும்‌ குறிப்பாக, உழவர்கள்‌ பயன்பெறுவதால்‌, தங்களுக்கு மட்டுமல்ல, இந்த மாநிலத்து மக்களுக்கே உணவுப்‌ பொருட்களை உற்பத்தி செய்து தரப்‌ போகிறார்கள்‌. அத்தகைய மகத்தான திட்டம்தான்‌ இந்த திட்டம்‌.


மக்களோடு நேரடியாக தொடர்பில் இருக்கக்கூடிய துறை, மின்சாரத்‌ துறை ஆகும்‌. புதிய இணைப்பு பெற்றவர்கள், உழவு உற்பத்தியைப்‌ பெருக்க வேண்டும்‌ என்ற ஒரே ஒரு நோக்கத்துடன் புதிய மின்‌ இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தமிழகத்தில் உழவுப்‌ புரட்சிக்கு அடித்தளமாக அமைந்து, உற்பத்திப்‌ பரப்பு அதிகமாவதற்கும் பெரும் உதவி இருக்கும்.


இலவச மின் இணைப்பால்
இரட்டிப்பானது விவசாயம்
என் பெயர் சிவக்குமார். நான் நஞ்சுண்டாபுரத்தில் வசித்து வருகிறேன். 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன்.

எங்களுடைய குடும்ப செலவிற்கும், குழந்தைகளின் படிப்பு செலவிற்கும் விவசாயத்தில் வரும் வருமானத்தை நம்பித்தான் இருக்கிறோம். இந்நிலையில், மின் இணைப்பு இல்லாமல் ஜெனரேட்டர் மூலமாக மோட்டார் பம்பு இயக்குவதனால், அதிக அளவில் செலவு ஏற்பட்டு வந்தது.

இதனால், 3 ஏக்கர் நிலத்தில் பாதிஅளவு நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்து வந்தோம்.
இலவச மின் இணைப்பு வேண்டி பதிவு செய்தேன். ஆனால், வருடக்கணக்கில் ஆகியும் மின் இணைப்பு கிடைக்கவில்லை.

இதனால் மிகவும், சிரமமாக இருந்தது. இந்நிலையில், விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் இலவச மின் இணைப்பினை வழங்கும் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் என்னுடைய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது.

இதனால் எங்களுடைய நிலத்தில் தற்போது பயிர்களை கூடுதலாக விதைத்துள்ளோம்.

இலவச மின்சாரம் கிடைத்துள்ளதால், மின் மோட்டார் மூலம் தினசரி தேவையான அளவு தண்ணீர் பாய்ச்சுவதால் காய்கறிகள், பூக்கள், நெல் போன்றவற்றில் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் எங்களுக்கு விவசாயத்தின் மூலம் வரும் வருமானம் அதிகரித்து உள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்திய முதல்வருக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.


வெளியீடு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
கோயம்புத்தூர்.

படிக்க வேண்டும்

spot_img