fbpx
Homeபிற செய்திகள்ரூ.2.11 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தீவிரம்- தருமபுரி மலைக் கிராம மக்கள்...

ரூ.2.11 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தீவிரம்- தருமபுரி மலைக் கிராம மக்கள் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி

தருமபுரி மாவட்டத்தில் விரிவான பழங்குடியினர் நல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் 215 பயனாளிகளுக்கு பல்வேறு வீடுகள், இலவச கறவை மாடு, பவர்டிரில்லர், பல்வேறு பயிற்சிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகின்றன. 268 பழங்குடியினர்களுக்கு 130.268 ஹெக்டேர் பரப்பளவு தனிநபர் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.


சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக, ஒருங்கிணைந்த மற்றும் திட்டமிடப்பட்ட முறையில் அதிக கவனம் செலுத்திடும் பொருட்டு சமூக நலத்துறை 1988-ம் ஆண்டில் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தனியாகத் தோற்றுவிக்கப்பட்டது.


ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக-பொருளாதார நிலையினை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை பழங்குடியினர் நலத்துறை உருவாக்கி முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை நடத்துதல், அவர்களது குடியிருப்புகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், வன உரிமைச் சட்டத்தினை செயல்படுத்துதல் மற்றும் பழங்குடியினர் பொருளாதார நல மேம்பாட்டிற்கான திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆகிய பணிகள் இயக்குநரகம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இம்மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டங்களுடன், பழங்குடியின இளைஞர்களுக்கு சுயதொழில் / வேலைவாய்ப்பினை உருவாக்கிட பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் அளிக்கப்பட்டு வருகின்றன.
சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் இம்மக்களின் உரிமைகளை பாதுகாத்திடவும், அவர்களுக்கெதிராக நடைபெறும் வன்கொடுமைகளை தடுத்திடும் பொருட்டும் இயற்றப்பட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் செயலாக்கத்தினை, காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு கண்காணித்து வருகிறது.
பழங்குடியினர் மேம்பாட்டின் முக்கிய நோக்கம் பழங்குடியினரின் கல்வி மற்றும் சமூக நிலையை மேம்படுத்தி பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பதோடு, இம்மக்களை பொருளாதார மற்றும் சமூக நீரோட்டத்தில் ஒருங்கிணைப்பதாகும்.

இந்நோக்கத்தை அடையும் வகையில் பழங்குடியினர் நலனுக்கென தனியாக ஓர் இயக்குநரகம் 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தோற்றுவிக்கப்பட்டது.


பழங்குடியினர் நலப் பொருண்மைகள் குறித்த நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்களுடன் முழு அதிகாரத்தோடு கூடிய தனித் துறையாக பழங்குடியினர் நலத்துறை செயல்பட்டு வருகிறது.


36 வகை பிரிவுகளில்
பழங்குடியின மக்கள்
2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 1.10 விழுக்காட்டை உள்ளடக்கிய 7,94,697 பழங்குடியின மக்கள் 36 வகையான பிரிவுகளில் வசித்து வருகின்றனர்.

இவர்களுள் பெரும்பான்மை யானோர், மலைப்பகுதிகளிலும், அதனை ஒட்டிய பிற இடங்களிலும் வசித்து வருகின்றனர். அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை மாநில சராசரியை விட குறைவாக உள்ளது.


எனவே, தமிழகத்தில் பழங்குடியினர் அதிகமாக வசித்து வரும் தருமபுரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கடலூர், மதுரை, அரியலூர், திருநெல்வேலி, தென்காசி, சென்னை ஆகிய 23 மாவட்டங்களில் பழங்குடியினரின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலையில், பழங்குடியின மக்களை அதிகம் பாதிக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகள், குறைவான அடிப்படை வசதிகளுடன் வாழும் நிலை, வன வளங்கள் அழிக்கப்படுவதால் மக்கள் இடம் பெயர்தல், பொருளாதார வாய்ப்புகள் இல்லாமை மற்றும் குறைந்த கல்வி அறிவு போன்ற இன்னல்களை களைவதற்கு அரசு சிறப்பு முயற்சிகளை எடுத்து வருகிறது.


பழங்குடியின மக்களை கல்வி, சுற்றுப்புறத் தூய்மை ஆகியவற்றில் மேம்பாடு அடையச் செய்வதும், சுகாதாரம், அவர்களது குடியிருப்புகளுக்கு முழுமையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, இணைப்புச்சாலைகள், மின்சார வசதி மற்றும் வீடுகள் கட்டித்தருதல் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வளர்ச்சி அடையச் செய்வதும் தமிழ்நாடு அரசின் முதன்மையான குறிக்கோளாகும்.


போட்டித்தேர்வுக்கு பயிற்சி
இதன்படி, தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் விரிவான பழங்குடியினர் நல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 50 பழங்குடியின மக்களுக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் இலவச வீடுகள் கட்டும் பணிகளும், 20 உறுப்பினர்களை கொண்ட மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரம் தயாரிக்கும் பணிகளும், 40 உறுப்பினர்களை கொண்ட மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் காகிதம் மற்றும் துணிப்பைகள் தயாரிக்கும் பணிகளும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இதே திட்டத்தின் கீழ் 50 பழங்குடியின மக்களுக்கு ரூ.17.50 இலட்சம் மதிப்பீட்டில் இலவச கறவை மாடுகளும், 5 பழங்குடியின விவசாயிகளுக்கு நவீன முறையில் விவசாயம் மேற்கொள்ள ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் பவர் டிரில்லர்களும் வழங்கப்பட்டுள்ளன.

50 படித்த வேலைவாய்ப்பற்ற பழங்குடியினரின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.


விரிவான பழங்குடியினர் நல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் 215 பயனாளிகளுக்கு பல்வேறு வீடுகள், இலவச கறவை மாடு, பவர்டிரில்லர், பல்வேறு பயிற்சிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகின்றன.


கிடைத்தது கறவைமாடு
நீங்கியது ஏழ்மை நிலை


தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வத்தல்மலை, பெரியூர் கொண்டகரஅள்ளி கிராமத்தில் குடியிருந்து வரும் பழங்குடியினத்தை சேர்ந்த பார்வதி க/பெ. சின்னையன் தெரிவித்ததாவது:


பெரியூர் கொண்டகரஅள்ளி கிராமத்தில் மூன்று தலைமுறையாக வசித்து வருகிறேன்.


விவசாய கூலியாக நானும், எனது கணவரும் இருப்பதால் எங்களது குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளது. கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம். இதுவரை எங்களது கிராமத்திற்கு எந்த முதல்வரும் வந்ததில்லை.

எங்கள் கிராமத்திற்கு 30.09.2021 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வருகை தந்து எங்கள் பகுதி மக்களுடன் கலந்துரையாடி, எங்களது குறைகளை கேட்டறிந்ததோடு, அன்றைய தினம் ரூ.35000/- மதிப்பிலான கறவைமாட்டினையும் எனக்கு வழங்கினார்.


இதன் மூலம் தினமும் பால் கறந்து அரசு பால் சொசைட்டிக்கு ஊற்றி அதன் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு எனது குடும்ப வாழ்வாதாரத்தை நல்ல முறையில் மேம்படுத்தி வருகிறேன்.

இந்த வாய்ப்பினை உருவாக்கி தந்துள்ள முதல்வருக்கு கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மகிழ்ச்சியுடன்.


தமிழகத்தில் பழங்குடியினர் மக்கள் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மக்க ளாகிய இருளர் இன மக்களின் வாழ் வாதாரம் பெருகவும், வாழ்க்கை தரம் மேம்படவும் எங்கள் மீது தனி அக்கறை கொண்டு எண்ணற்ற திட்டங்களை அறி வித்து செயல்படுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தருமபுரி மாவட்ட பழங்குடியினர் மக்கள் மற்றும் இருளர் இன மக்கள் என்றென்றும் நன்றி கடன்பட்ட வர்களாக இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

ரூ.20 இலட்சத்தில் சுகாதார நிலையங்கள்
பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி கிடைத்திட பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 3 பள்ளிகள் மற்றும் விடுதிகளை ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளும், பழங்குடியின மக்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ சேவை கிடைப்பதற்காக மலைப்பகுதிகளில் அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே உள்ள 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு, இம்மக்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.


இதைத்தவிர அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 50 படித்த வேலைவாய்ப்பற்ற பழங்குடியினரின் குழந்தைகளுக்கு ரூ10 இலட்சம் மதிப்பில் கேட்டரிங், ஓட்டுநர், தையல், மருத்துவம் சார்ந்த செவிலியர், எலக்ட்ரிசியன் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிப்பதற்கான பணிகளும், 10 பழங்குடியினர்களுக்கு ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் மீன்பிடி வலை மற்றும் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு பயனாளிக்கு தலா 12 செம்மறி ஆடுகள் வீதம் 17 பயனாளிகளுக்கு 204 செம்மறி ஆடுகள் வழங்குவதற்கான பணிகளும், 25 பழங்குடியினர்களுக்கு ரூ.1.50 இலட்சம் செலவில் சிறப்பு ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்கான பணிகளும், 50 உறுப்பினர்களை கொண்ட மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கோழிப்பண்ணை அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

5 பழங்குடியின விவசாயிகளுக்கு நவீன முறையில் விவசாயம் மேற்கொள்ள ரூ.9 இலட்சம் மதிப்பீட்டில் பவர் டிரில்லர்களும் வழங்கப்பட்டுள்ளன.


சிறப்பு நிதி
உதவித் திட்டம்
பழங்குடியினர் சிறப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ், 21 பழங்குடியின மக்களுக்கு ரூ.64.80 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீடுகள் கட்டும் பணி, கழிவுநீர் வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

110 பழங்குடியின மக்களுக்கு ரூ.38.50 இலட்சம் மதிப்பீட்டில் இலவச கறவை மாடுகள் வழங்குவதற்கான பணிகளும், 3 பழங்குடியின மக்களுக்கு ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் சூரிய சக்தியில் இயங்கும் பம்ப் செட்டுகள் அமைக்கும் பணிகளும், 50 பழங்குடியின மக்களுக்கு ரூ.2.33 இலட்சம் மதிப்பீட்டில் 50 இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.


தருமபுரி மாவட்டத்தில் அழிவின் விளிம்பிலுள்ள பண்டைய இருளர் பழங்குடியினர்களின் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்காக 30 பழங்குடியின மக்களுக்கு ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.65.45 இலட்சத்தில்
உட்கட்டமைப்பு வசதி


சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தபடி, பழங்குடியினர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 16 பழங்குடியின மக்களுக்கு ரூ.48 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டும் பணிகளும், ரூ.7.18 இலட்சம் மதிப்பீட்டில் தெரு விளக்குகள் அமைக்கும் பணிகளும், ரூ.10.29 இலட்சம் மதிப்பீட்டில் சூரிய ஒளி விளக்குகள் அமைக்கும் பணிகளும் என மொத்தம் ரூ.65.45 இலட்சம் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.


ரூ.11.90 இலட்சம் மதிப்பீட்டில் பழங்குடியினர் மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.


ரூ.5.78 கோடியில் பணிகள்
தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய மக்களாகிய இருளர் இன மக்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்காகவும், வாழ்க்கை தர உயர்விற்காகவும் ரூ.5.78 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.


வன உரிமைச்சட்டத்தின் கீழ், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களின் வாழ்க்கை தர உயர்விற்கும், தனி நபர் உரிமம் மற்றும் சமுதாய உரிமம் வழங்கி, அவர்கள் வருவாய் ஈட்டி பயன்பெறும் வகையில் வன நிலத்தில் 75 வருடங்களாக தனது சொந்த அனுபவத்தில் பயன்படுத்தி வந்த 268 பழங்குடியினர்களுக்கு 130.268 ஹெக்டேர் பரப்பளவு தனிநபர் பட்டாக்களும், வனங்களில் விளையும் மகசூல்களான கிழங்கு, புளி, கடுக்காய் போன்றவற்றை சேகரிப்பதற்கு 49 வன குழுக்களை சேர்ந்த 4149 பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் 75.222 ஹெக்டேர் பரப்பளவு சமுதாய உரிமமும் வழங்கப்பட்டுள்ளன.

76 பழங்குடியினர்களுக்கு 37.718 ஹெக்டேர் பரப்பளவு தனிநபர் பட்டாக்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


விடைபெற்றது கஷ்டம்
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மாம்பட்டி அஞ்சல், கைலாபுரம் மலைக்கிராமத்தை சேர்ந்த இருளர் இனத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சேட்டு (வயது 41) தெரிவித்ததாவது:


கைலாபுரம் மலைக்கிராமத்தில் நாங்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எனக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

குழந்தைகள் பள்ளியில் படித்து வருகின்றனர். அவ்வப்போது விவசாய கூலி வேலையினையும், எனது 2 ஏக்கர் நிலத்தில் எங்களிடமிருந்த மாடுகளை வைத்து உழவு பணிகளையும், விவசாய வேலையினையும் செய்து வந்தேன். விவசாயம் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தோம்.

இதனால் எங்களது குடும்பத்திற்கு போதுமான வருமானம் கிடைக்காமல் இருந்தது. ஆகையால் எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தது. வறுமை நிலையில் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம்.

இந்நிலையில் வாடகைக்கு டிராக்டர் போன்ற இயந்திரங்களை பயன்படுத்தி உழவு பணிகளை மேற்கொள்ள இயலவில்லை.

சமூகத்தில் பின்தங்கிய இருளர் இன மக்களாகிய எங்களுக்கு எப்போது நல்லவழி கிடைக்கும், எங்களது வாழ்க்கைத்தரமும், வாழ்வாதாரமும் உயரும் என்று ஏங்கி கொண்டிருந்தோம்.

முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இருளர் இன மக்களை கண்டறிந்து, எங்கள் வாழ்வில் ஒளியேற்றிட எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

இதனால் இதுவரையில் யாராலும் பார்க்கப்படாத நாங்கள் இப்பொழுது எல்லோராலும் பார்க்கப்படுகிற, பாராட்டப்படுகிற நிலையை அடைந்திருக்கிறோம்.

நேரில் வந்தார் முதல்வர்
உயர்ந்தது வாழ்க்கைத் தரம்


தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வத்தல்மலை, குளியனூர் கிராமத்தில் குடியிருந்து வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த தாமரை க/பெ. மாது தெரிவித்ததாவது:


குளியனூர் கிராமத்தில் மூன்று தலைமுறையாக வசித்து வருகிறேன். நாங்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் விவசாய கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தோம்.

அந்த விவசாய கூலி வேலைகூட சில சமயங்களில் கிடைக்காமல் எனது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம்.

இந்நிலையில் கடந்த 30.09.2021 அன்று முதல்வர், எங்கள் மலைக்கிராமமான வத்தல் மலைக்கு நேரில் வந்து ரூ.35000/- மதிப்பிலான கறவைமாடு எனக்கு வழங்கினார்.

இதன் மூலம் தினமும் பால் கறந்து அரசு பால் சொசைட்டிக்கு ஊற்றி அதன் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு எனது குடும்ப வாழ்வாதாரத்தை நல்ல முறையில் மேம்படுத்தி வருகிறேன்.

பழங்குடியின மக்களாகிய எங்கள் இருப்பிடத்திற்கே முதல்வர் வருகை தந்து எனக்கு கறவை மாட்டினை அவரின் திருக்கரங்களால் வழங்கி எனது வாழ்வாதாரத்திற்கும், வருமானத்திற்கும் வாய்ப்பை உருவாக்கி தந்த முதல்வருக்கு பணிவான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

கால நேரமும் மிச்சம்
வருமானமும் அதிகம்


எங்களைப்போன்ற சமூகத்தில் பின்தங்கிய இருளர் இன மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்திட அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களில் ஒன்றான நவீன விவசாயத்தினை மேற்கொள்ள வசதியாக பவர் டிரில்லர் வேண்டி விண்ணப்பம் அளித்தேன்.

அதனை ஆய்வு செய்து இருளர் இனத்தை சேர்ந்த எனக்கும், என் சமூகத்தை சேர்ந்த 4 பேருக்கும் ரூ.1,80,000/- மதிப்பிலான நவீன பவர் டிரில்லர் கருவி கிடைக்கப் பெற்றது. இதன் மூலம் எனது விவசாய நிலத்தில் நானே பவர் டில்லர் மூலம் உழவு பணிகளை எளிதில் மேற்கொண்டு வருகிறேன்.

மற்றவர்கள் நிலங்களுக்கும் வாடகைக்கு உழவு பணிகளை செய்து கொடுத்து வருகிறேன்.

இதனால், எனக்கு கால நேரம் மிச்சமாவதோடு, வருமானமும் கிடைத்து வருகிறது. இந்த வருமானத்தைக் கொண்டு எனது குடும்ப வாழ்வாதாரத்தை நல்ல முறையில் மேம்படுத்தி வருகிறேன்.


பின்தங்கிய மக்களாகிய இருளர் இன மக்களின் வாழ்வாதாரம் பெருகவும், வாழ்க்கை தரம் மேம்படவும் எங்கள் மீது தனி அக்கறை கொண்டு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி இருளர் இன மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ள முதல்வருக்கு, இருளர் இன மக்களின் சார்பாகவும், எனது சார்பாகவும் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு, என்றென்றும் முதல்வருக்கு நன்றி கடன்பட்டவர்களாக இருப்போம்.


தொகுப்பு
மு.அண்ணாதுரை,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
த. வடிவேல்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
தருமபுரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img