fbpx
Homeதலையங்கம்நோரோ தொற்று

நோரோ தொற்று

பருவமழையை தொடர்ந்து ஏற்பட்ட தண்ணீர் மாசுபாட்டினால் தமிழகத்தில் பலர் நோரோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அதன் முக்கிய அறிகுறியாக கருதப்படும் வயிற்றுப்போக்கால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதே அதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றை மட்டுமே கண்கூடாக பார்த்த மக்களுக்கு நோரோ தொற்று புது விதமான அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அதிலும் குறிப்பாக, அண்டை மாநிலமான கேரளத்தில் 20க்கும் மேற்பட்டோருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனைகளை விரிவுபடுத்தினால் பலருக்கு நோரோ தொற்று இருக்கும் என கூறப்படுகிறது.

கொரோனா அளவுக்கு இது வீரியமானது இல்லை என்றாலும், அதீத அலட்சியம் காட்டினால் சிறு நீரகம் செயலிழக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

காய்ச்சிய நீரை மட்டுமே பருகவேண்டும், பழைய உணவுகளை உண்ணக்கூடாது, கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், கழிப்பறையை தூய்மையாக பராமரிக்க வேண்டும், காய்கறி, கீரைகளை சுத்தமாக கழுவ வேண்டும், நோரோ நோயாளிகளை தனிமைப்படுத்தவேண்டும்.

சுற்றுப்புற துப்புரவு முக்கியம். நோரோ நோயாளிகள் சமைக்கக் கூடாது. சோப்பால் கைகழுவாமல் உண்ணக்கூடாது.

ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டும். நோரோ நோய்த்தொற்றை பொறுத்தவரை அதீத அச்சமும் ஆபத்து தான். அதீத அலட்சியமும் ஆபத்து தான். விழிப்புணர்வுடன் செயல்பட்டால் அத்தொற்றிலிருந்து தப்பிக்கலாம்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வயிற்றுப்போக்கு பாதிப்புக்காக சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img