கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் முல்லை பெரியாறு புவியீர்ப்பு விசை அணையின் தாக்குப்பிடிக்கும் சக்திக்கு எடையே பிரதானம் என்பதால் தற்போதுள்ள வடிவமைப்பில் மாற்றம் செய்யாமல் 12 ஆயிரம் டன் கான்கிரீட் நிரப்பப்பட்டு அணையின் எடையும், பலமும் அதிகமாக்கப்பட்டிருக்கிறது.
ஸ்டீல் கம்பிகள் செருகப்பட்டிருப்பதால் நில அதிர்வுகள் விஷயத்திலும், பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக்கப்பட்டிருக்கின்றன.
மேலும் தமிழக, கேரள மாநிலங்களை சாராத மத்திய நீர் வளத்துறையின் வல்லுநர் குழு இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் திருப்தி தெரிவித்ததால் தான் அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தது.
நீர்மட்டத்தை 152 அடிக்கு நிறுத்தினால் கூட வெறும் 10.57 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தேக்கப்படும். ஆசியாவின் மிகப்பெரிய வளைவு அணை என அழைக்கப்படும் இடுக்கி அணையின் கொள்ளளவு 70 டிஎம்சி. முல்லை பெரியாறு அணையை விட 7 மடங்கு அதிகம்.
அதனால் இதுபோன்ற சிறிய அணைகளை விட அதிக நீர் தேக்கும் கொள்ளளவு கொண்டதாக 1976ம் ஆண்டு கேரள அரசால் கட்டப்பட்ட இடுக்கி அணை குறித்து தான் அம்மாநில மக்கள் அஞ்ச வேண்டும்.
1980களில் முல்லை பெரியாறு அணையில் யானை அளவுக்கு ஓட்டை இருக்கிறது என்றார்கள் கேரள அரசியல்வாதிகள். இவர்களின் மனக்கண்ணில் விழுந்த ஓட்டையால் 1895ம் ஆண்டு திறக்கப்பட்ட அணைக்கு இன்றுவரை எந்த ஆபத்தும் இல்லை.
கருங்கல், சுண்ணாம்பு, கடுக்காய் முதலியவற்றின் கலவையை கொண்டு பென்னிகுக் கட்டிய புவியீர்ப்பு விசை அணை உண்மையில் கான்கிரீட் அணைகளை விட பலமடங்கு உறுதியானதாக திகழ முடியும்.
நல்வாய்ப்பாக தற்போது இரு மாநில முதல்வர்களுக்கு இடையில் பரஸ்பர நட்புறவு நிலவுகிறது. பேபி அணையை பலப்படுத்தும் வகையில் மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட முறையான பராமரிப்புப் பணிகளுக்கு கேரள அரசு உரிய ஒத்துழைப்பைத் தந்தால் அதை தமிழக அரசு சிறப்பாக நிறைவேற்றும்.



