தீபாவளித் திருடர்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்க போலீசார் சட்டைக் கேமராவுடன் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகளவில் கூடும் கூட்டத்தில் திருட்டு நடப்பதைத் தடுக்க, கோவையில் போலீசார் சட்டையில் கேமரா பொருத்தியபடி உலா வந்து கண்காணித்து வருகின்றனர்.
தீபாவளிக்கு இன்னும், 8 நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் கடைவீதிகளில் திரண்டு வருகின்றனர். பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக தீபாவளி கூட்ட நெரிசலில் புகுந்து பொதுமக்களிடம் பணம், நகைகளை திருடுவது அதிகரித்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோவை வந்து முகாமிட்டுள்ள ஜேப்படி திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். திருட்டைத் தடுக்க, மாறு வேடத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வலம் வரும் போலீசார், திருடர்களை மடக்கிப்பிடித்து, கைது செய்து வருகின்றனர்.
மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, அங்கிருந்து திருடர்களின் நட வடிக்கைகளை கண்காணிக்கின்றனர். மேலும், ஒலிபெருக்கிகள் மூலம் பொது மக்களை ‘அலர்ட்’ செய்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பெண்கள் கடைவீதிக்கு, விலை உயர்ந்த நகைகள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்.” என்றனர்.



