பெட்ரோல், டீசல் விலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தொடர்ந்து 4வது நாளாக லிட்டருக்கு 35 பைசா வரை அதிகரிக்கப்பட்டது.
இதன்மூலம் நாட்டின் விமான எரிபொருளை விட பெட்ரோல், டீசலின் விலை 30 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 103.01 ஆகவும், டீசல் விலை 98.92ஆகவும் உள்ளது.
இதுவே டெல்லியில் பெட்ரோல் ரூ.105.84 ஆகவும், மும்பையில் ரூ.111.77 ஆகவும் உள்ளது. ஏற்கனவே அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விட்ட நிலையில் இப்போது டீசல் விலையும் பல்வேறு மாநிலங்களில் 100 ரூபாயைக் கடந்து உயர்ந்து வருகிறது.
டெல்லியில் விமானத்துக்கான எரிபொருள் 1 லிட்டர் ரூ.79 ஆக உள்ளது. ஆனால் வாகனங்களுக்கான பெட்ரோல், டீசல் விலை அதை விட 30 சதவீதம் அதிகமாக உள்ளது. இதன்மூலம் விமானத்தை இயக்குவதை விட இருசக்கர வாகனத்தை இயக்குவதற்கான செலவு அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே மிக அதிகமாக ராஜஸ்தான் மாநிலம் கங்காநகரில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.117.86 ஆகவும், டீசல் விலை 1 லிட்டர் ரூ.105.95 ஆகவும் உள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 84.8 டாலராக உள்ளது.
ஒரு மாதத்துக்கு முன்பு இதுவே 73.51 டாலராகத் தான் இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை.



