குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு சுகாதாரத்துறையில் காணப்படும் மனிதவள கட்டுப்பாடு குறித்து கூறி இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டிய நிலையில் இந்தியாவில் 1500 பேருக்கு ஒரு மருத்துவர்தான் காணப்படுகிறார். 300 பேருக்கு ஒரு செவிலியர் இருக்க வேண்டிய இடத்தில் 670 பேருக்கு ஒரு செவிலியர்தான் இருக்கிறார்.
கிராமப்புறங்களில் மருத்துவர்களும், செவிலியர்களும் மிகக் குறைவாக இருக்கும் நிலையில் மருத்துவத் தேவைக்காக நகரங்களை மக்கள் நாட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
மருத்துவக் கட்டமைப்பை உறுதிப்படுத்தாமல் எண்ம தொழில்நுட்ப மாற்றத்திற்கு முனைந்திருப்பது பலனளிக்குமா என்பது கேள்விக்குறியே.
இந்தியாவில் தன் மறைப்பு சட்டங்கள் இல்லாமல் இருக்கும் நிலையிலும் மக்கள் மத்தியில் தங்களது தரவுகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு காணப்படாத நிலையிலும் எண்ம சுகாதார அடையாள அட்டை மூலம் பாதுகாக்கப்படும் தகவல்களை தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உண்டு.
காப்பீட்டு நிறுவனங்கள் தரவுகளை திருடுவதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்து அதன் அடிப்படையில் கட்டணங்களை நிர்ணயித்து நோயாளிகளை சுரண்டுவதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது.
சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தாமலும், கடுமையான தன்மறைப்பு சட்டத்தை அமல்படுத்தாமலும், கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த திட்டத்தின் நோக்கம் சிறந்தது.
அதே சமயத்தில் நடைமுறைப் பிரச்சினைகள் நிறைந்தது.



