ஒரு சூதாட்டத்தால் ஒரு சாம்ராஜ்யமே அழிந்தது. மிக பெரிய குருஷேத்திர போரை சந்தித்தது என்பதெல்லாம் கதையாக தெரிந்தாலும் அதை நினைத்து பார்க்கும் போது சூதாட்டம் எவ்வளவு பெரிய இழப்புகள், நெருக்கடிகளை உருவாக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
அதனால்தான் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை சூதாட்டம் என்பது தேவையற்ற விளையாட்டு என்ற மனோநிலையில் தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள்.
அதன் அடிப்படையில்தான் சமூக பொறுப்பும் அரசுக்கு உண்டு என்ற ரீதியில் சூதாட்டத்தை அனுமதிப்பது கிடையாது.
விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்தக்காலத்தில் ஆன்லைனில் வந்திருக்கும் இதே சூதாட்டத்தை அன்று கிராமப்புறங்களில் மரத்தடிகளில் இருந்து விளையாடினார்கள்.
ஆனால் அதை ஒருபோதும் அனுமதிப்பது கிடையாது. பணம் வைத்து சூதாடியவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இது பல ஆண்டுகளாகவே நடந்து வருவது தான். ஆனால் இப்போது ஆன்லைன் மூலமாக புதிய வடிவத்தில் வந்துள்ள இந்த விளையாட்டு சூதாட்ட மோகத்தில் இருப்பவர்களை கவருகிறது.
விளையாடும் இடம் மாறி இருக்கிறது. ஆனால் விளையாட்டு ஒன்றுதான். இந்த ஆன்லைன் விளையாட்டால் பொருளாதார கடனில் சிக்கி வாழ்க்கையை வெறுத்து கடன்காரர்களுக்கு பயந்து தற்கொலை செய்தவர்கள் பலர்.
எனவே சமூக நலன் கருதி ஆன்லைனில் பரவும் இந்த ரம்மி விளையாட்டுக்கு கடிவாளம் போட்டே ஆக வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பில் இருந்தும் எழுந்தது.
அதன் அடிப்படையில் கடந்த ஆட்சியில் கடந்த நவம்பர் மாதம் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது.
அதாவது பொறியில் சிக்கியது ஆன்லைன் சூதாட்டத்தில் கோடிகளை குவித்து பலரை தெருக்கோடிக்கு அனுப்பி கொண்டிருந்த நிறுவனங்கள்.
இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கில் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது.
நேற்று முன்தினம் தீர்ப்பு வெளியானதுமே பொறியில் சிக்கிய எலி துள்ளி வெளியே ஓடுவதை போல அடுத்த சில நிமிடங்களில் ஆன்லைன் தளத்தில் ரம்மி விளையாட்டு சூடு பிடித்தது.
சட்டப்படி தப்பினாலும் அதைவிடக்கூடாது. பொதுநலன் முக்கியம் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் இப்போது புதிதாக அமைந்திருக்கும் இந்த அரசு உரிய விதிமுறைகளோடு, தகுந்த காரணங்களுடன் புதிய சட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்து உள்ளது.
அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.
தங்க ஊசியாக இருந்தாலும் அதை எடுத்து கண்ணுக்குள் குத்தி கொள்ள முடியாது.
அதேபோலத்தான் சூதாட்டமும் திறமையான விளையாட்டாக பார்த்தாலும் அதனால் சமூகத்தில் ஏற்படும் சீரழிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற ரீதியில் அரசு சட்டம் இயற்ற தயாராகி கொண்டிருக்கிறது.
விளையாட்டு என்பது மட்டுமல்ல, எந்தவொரு செயலாக இருந்தாலும் சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடியவைகள் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு, கடமை.



