சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் துணை நகரங்கள் அமைப்பது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நகரங்கள் மாடல் நகரமாக அமைய வேண்டும் என்பது முதல்வரின் விருப்பமாக உள்ளது என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வீட்டுவசதித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து, வீட்டுவசதித் துறை வாரிய அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் முதல்வர் மேற்கொண்ட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளால், கடந்த ஒன்றரை மாதத்தில் கொரோனா தொற்று பரவல் மிகவும் குறைந்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் ஒவ்வொரு துறையிலும் நடைபெற்றுள்ள பணிகள், இனி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்ற பணிகள் தொடர்பாக ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் தேர்தல் அறிக்கையில், மாவட்டங்களில் உள்ள அனைத்து துறையிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த கூடிய வகையிலும் மக்களுக்கு பயன்தரக் கூடிய திட்டங்களையும் அறிவித்துள்ளார்.
கூடுதலான திட்டங்களை முதல்வர் தொலைநோக்கு பார்வை யில் அமைத்து கொடுத்துள்ளார்.
அதனடிப்படையில் வீட்டு வசதித் துறையின் சார்பில் செயல்படுத்தப் பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வீட்டுவசதித் துறை வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை துரிதப்படுத்தவும், பணிகளில் தேவையான மாற்றத்தை கொண்டு வரவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் துணை நகரங்கள் அமைப்பது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நகரங்கள் மாடல் நகரமாக அமைய வேண்டும் என்பது முதல்வரின் விருப்பமாக உள்ளது.
ஆட்டோ நகரம்
திருச்செங்கோடு, நாமக்கல், பெருந்துறை ஆகிய பகுதிகளில் அதிகமான லாரிகள் இருப்பதால் அங்குள்ள லாரி உரிமையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அங்கு ஆட்டோ நகரம் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி துறையின் சார்பில் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பத்திரப்பதிவு செய்யப்படாமல் உள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குள் பத்திரப்பதிவு செய்து கொடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் பழுதடைந்துள்ள கட்டிடங்களுக்கு பதிலாக மாற்று கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கட்டிட அனுமதிக்கு ஒற்றை சாளர முறை கொண்டுவரப்படவுள்ளது. இதற்கு தனியாக மென்பொருள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் கட்டிட அனுமதி கோப்புகள் மீது 60 நாட்களுக்குள் அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விதி மீறலுக்கு அனுமதி இல்லை
சட்டத்தினை மீறி எவ்வித கட்டிடங்களும் கட்ட இனி அனுமதி கிடையாது வரைபடத்தில் உள்ளதுபோல்தான் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்படும்.
இதனை கண்காணிப்பதற்கு பறக்கும் படை அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்கும்போது நகர்ப்புறங்களில் மாறி வரும் சமூகப் பொருளாதார நிலைகளையும் வாங்கும் திறனுக்கேற்ற வீட்டுவசதித் தேவைகளையும், அதற்கான உட்கட்டமைப்புகளையும் உருவாக்கும் வகையில் போதிய திட்டமிடுதலுடன் வீட்டு வசதித்துறை செயல்படுகிறது.
அதிகரித்துவரும் நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக அனைவருக்கும் இயலக்கூடிய அளவில் குடியிருப்பு வசதியளித்தல் என்பது அவசியம் ஆகிறது.
இதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு வீட்டுவசதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நான்கு பிரிவுகள்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் வீட்டு மனைகள், வீடுகள் அமைக்கப்பட்டு இந்த நிறுவனம் நிர்ணயிக்கும் விலையில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் குறைந்த வருவாய்ப் பிரிவினர் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் உயர் வருவாய்ப் பிரிவினர் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் அளிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது இத்துறையினை சிறப்பாக செயல்படுத்திட வீட்டு வசதி துறை சார்பில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வீட்டு வசதித்துறை அலுவலகத்திற்கு வரும் பொது மக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான இருப்பிடத்தினை உறுதி செய்து வரும் குடிசை மாற்று வாரிய அலுவலர்களும் அனைத்து தரப்பு மக்களுக்கான வீட்டு வசதித் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பணியாற்றி வரும் வீட்டுவசதித் துறை அலுவலர்களும், தங்களின் பணியின் தன்மையறிந்து சிறப்பு கவனமுடன் பணியாற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வீட்டுவசதித்துறை அரசு முதன்மை செயலாளர் ஹிதேஷ் குமார் எஸ்.மக்வானா, மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநர் சுன்ஜோங்கம் ஜடக் சிறு, குடிசை பகுதி மாற்று வாரிய இணை மேலாண் இயக்குநர் க.இளம்பகவத், நகர் ஊரமைப்பு இயக்க இயக்குநர் சரவணவேல்ராஜ், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா,
வீட்டு வசதி வாரிய தலைமை பொறியாளர் ஆர்.சரவணன், கண்காணிப்பு பொறியாளர் மு.வு.சாந்தி, குடிசை மாற்று வாரிய தலைமை பொறியாளர் இராம மோகன், மேற்பார்வை பொறியாளர் கே.ஜி.நஞ்சப்பன், மாவட்ட நகர் ஊரமைப்பு உறுப்பினர் செயலர் மற்றும் இணை இயக்குநர் வாழவந்தான், வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் கரிகாலன், குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திட்டப் பணிகள் ஆய்வு
முன்னதாக கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு கிராமத்தில் 53 ஏக்கர் பரப்பளவில் 1006 மனைகள் மேம்பாட்டுத்திட்டம் ரூ.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருவதையும், பெரியநாயக்கன் பாளையத்தில் சுமார் 10.81 ஏக்கர் பரப்பளவில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவுக்காக ரூ.152.87 கோடி மதிப்பில் 1800 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதையும், கவுண்டம்பாளையம் பகுதியில் 12.49 ஏக்கர் பரப்பளவில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ள 1848 பன்னடுக்கு வாடகை குடியிருப்பு களையும், சிங்காநல்லூர் – உப்பிலிபாளையம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியினையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



