தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் மூலம் உழைக்கும் சிறார்களை மீட்டு, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி மையங்களில் இரண்டு ஆண்டுகள் கல்வி அளிப்பதோடு முறைசார்ந்த பள்ளிகளில் சேர்த்து தொடர்ந்து படிப்பதற்குத் தேவையான உதவிகளும் ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது.
மேலும் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் தொழிற்கல்வி பாலிடெக்னிக்குகளில் சேர்ந்து கல்வி பயில்வதற்கும், தமிழக அரசின் மூலம் கல்வி உதவித் தொகையாக ரூ.6000 (ரூபாய் ஆறாயிரம் மட்டும்) வருடத்திற்கு வழங்கப்படுகிறது.
12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி செவிலியர் பயிற்சி இன்ஜினியரிங் படிப்பதற்கும் வருடத்திற்கு ரூ.6000 (ரூபாய் ஆறாயிரம் மட்டும்) மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2013-14-ம் ஆண்டுகளில் தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் மூலம் கண்டறியப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 2020- 21-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து தேர்வெழுதிய 13 மாணவ, மாணவிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
அதிகபட்ச மதிப்பெண்ணாக 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று எஸ்.அபிநயா, இ.கிருபாவதி, என்.நாகலட்சுமி ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் தலைவரும் மாவட்ட ஆட்சியருமான ஜி.எஸ்.சமீரன் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தொடர்ந்து உயர்கல்வி படிப்புகளுக்கு கல்லூரிகளில் சேருவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
இத்தகவலை திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.



