fbpx
Homeபிற செய்திகள்7,41,153 குடும்ப அட்டைதார்களுக்கு ரூ.7.02 கோடி பொங்கல் பொருட்கள் முதல்வருக்கு ஈரோடு மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

7,41,153 குடும்ப அட்டைதார்களுக்கு ரூ.7.02 கோடி பொங்கல் பொருட்கள் முதல்வருக்கு ஈரோடு மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

ஈரோடு மாவட்டத்தில் 7,39,771 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் குடும்ப அட்டைகள் 1,382 ஆக மொத்தம் 7,41,153 குடும்ப அட்டைகளுக்கு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.7.02 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது.

உலகிற்கே அச்சாணியாக திகழும் உழவுத் தொழிலை போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருநாளாகவும், உழைப்பின் சிறப்பையும், உழவுத் தொழிலுக்கு உயிரூட்டும் சூரியனையும், உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும் போற்றுகின்ற நன்னாளாகவும், சாதி, மத, பேதமற்று நாம் அனைவரும் ஓரினம் – தமிழினம் என்ற உன்னத உணர்வை பிரதிபலிக்கும் வகையிலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

2.15 கோடி குடும்பங்கள்
இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கும், மஞ்சள்தூள், மிளகாய்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், நெய், மிளகு, புளி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, உப்பு, ரவை, கோதுமை மாவு, வெல்லம், அரிசி, முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய் ஆகிய மளிகை பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் கூடிய தொகுப்பு மற்றும் முழு கரும்பும் சேர்த்து 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை தமிழகத்தில் வழங்கிடும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக, முதல்வர் 4.1.2022 அன்று தலைமைச் செயலகத்தில், 10 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி, தொடங்கி வைத்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததாவது:

பொங்கல் பொருட்கள் என்னென்ன-?
இத்தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமை யலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) மற்றும் முழுநீள கரு ம்பு ஆகியவை வழங்கப் படுகிறது. இதில் மளிகைப் பொருட்கள் ரூ.505 மதிப்பிலும், கரும்பு ரூ.33 மதிப்பிலும் என மொத்தம் தலா ரூ.538 மதிப்பிலான தொகுப்பு வழங்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவுச் சங்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7,39,771 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் குடும்ப அட்டைகள் 1,382 ஆக மொத்தம் 7,41,153 குடும்ப அட்டைகளுக்கு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரி சுத் தொகுப்பு ரூ.7.02 கோடி மதிப்பீட்டில் வழங்கப் படு கிறது.

ரூ.550 மதிப்பிலானது
ஈரோடு மாவட்டம், சித்தோடு, சக்திநகர் பகுதி யைச் சேர்ந்த பிரதீஸ் தெரிவித் ததாவது: எனது தந்தை நெசவு தொழில் செய்து வருகிறார்.

நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறேன். பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் ரூ.550 மதிப்புள்ள பொங்கல் பரிசுடன் மளிகை பொருட்களை, அழகிய துணிப்பையுடன் வழங்கியுள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிய முதல்வருக்கு எனது குடும்பத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தரமானவை
ஈரோடு மாவட்டம், சித்தோடு சக்தி நகர் பகுதி யைச் சேர்ந்த ஜெயந்தி தெரிவித்ததாவது: பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை மற்றும் முழுநீள கரும்பு ஆகிய 21 பொருட்களை வழங்கியுள்ளனர்.

அனைத்து பொருட்களும் தரமாகவும், சரியான எண்ணிக்கையிலும் உள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை எனது குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிய முதல்வருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்து, தொடங்கி வைத்துள்ளார்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கடந்த 4-ம் தேதி ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டுறவுத் துறையின் சார்பில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பினை, பயனாளிகளுக்கு வழங்கி, இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்.

இச்சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாயவிலைக் கடைகளுக்கு, ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்கவும், கொரோனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற ஏதுவாகவும், பொங்கல் பரிசுத் தொகுப்பினை விநியோகத்திட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்படுகிறது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள், சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

தொகுப்பு:
க.செந்தில்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
ஈரோடு மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img