இராசிபுரம் அரசு பட்டுக்கூடு அங்காடியில் 18.08.2022 வரை நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி மாவட்டங்களை சார்ந்த 650 பட்டு விவசாயிகள் 82.173 மெ.டன் பட்டுக்கூடுகளை ரூ.4.56 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்ட பட்டுக்கூடு உற்பத்தியாளர்களின் வருமானத்தை பெருக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, அரசு பட்டுக்கூடு ஏல விற்பனை அங்காடி அமைக்கப்படும் என்று வாக்குறுதியளித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில், பட்டுவளர்ச்சித்துறையின் கீழ், இராசிபுரம், வெண்ணந்தூர், திருச்செங்கோடு, பரமத்தி, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
“மாதந்தோறும் 50 ஆயிரம் பட்டுக்கூடு”
இப்பகுதிகளில் 1,304 பட்டு விவசாயிகள் 2459.00 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி செய்து பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொண்டு வருகின்றனர். மாதம் தோறும் சுமார் 1,000 பட்டு விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொண்டு சராசரியாக 50,000 கிலோ கிராம் பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்து வருகிறார்கள்.
24.09.2021 வரை விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பட்டுக்கூடுகளை தங்களது சொந்த செலவில் ஒவ்வொரு மாதமும் சேலம், தர்மபுரி, கோவை மற்றும் அண்டைய மாநிலமான கர்நாடகாவில் செயல்பட்டு வரும் ராம் நகரில் உள்ள அரசு பட்டுக்கூடு அங்காடிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் நிலை இருந்தது.
தற்போது முதல்வரின் நடவடிக்கையால் இராசிபுரம் பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில், பட்டுக்கூடு ஏல விற்பனை அங்காடியை 24.09.2021 அன்று சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் திறந்து வைத்தார்.
இந்த அங்காடியில் பட்டுக்கூடு கொள்முதல் செய்ய வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து பட்டு நூற்பாளர்கள் வருகை தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இராசிபுரம் அரசு பட்டுக்கூடு அங்காடியில் 18.08.2022 வரை நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி மாவட்டங்களை சார்ந்த 650 பட்டு விவசாயிகள் 82.173 மெ.டன் பட்டுக்கூடுகளை ரூ.4.56 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.
“நேரமும் மிச்சம், போக்குவரத்து செலவும் மிச்சம்”
இராசிபுரம் அரசு பட்டுக்கூடு ஏல விற்பனை அங்காடி மூலம் பயன்பெற்று வரும் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், ஆயில்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி இராமன் தெரிவித்ததாவது:
எங்களுக்கு இரண்டரை ஏக்கர் விவசாய நிலம் இருக்குதுங்க. அதிலே இதுக்கு முன்னாடி கம்பு, கடலை, சோளம் போட்டு விவசாயம் பண்ணிட்டு இருந்தோம்ங்க. அதுல பெரிய வருமானம் ஒன்னும் கிடைக்கலிங்க.
அதுக்கு பிற்பாடு பட்டு வளர்ச்சித்துறையிலிருந்து அதிகாரிக எல்லாம் வந்து பட்டுக்கூடு போடுங்க நல்ல வருமானம் வரும்னு சொன்னாங்க. அப்பறம் நாளடைவில மத்த விவசாயத்துல வருமானம் இல்லாததால பட்டுக்கூடு வளர்ப்பு சேர்த்து செஞ்சோம்.
எங்க அப்பா காலத்துல பட்டு போடும்போது பட்டுக்கூடு அங்காடி இங்க இல்ல. கர்நாடகா தான் போகணும். அப்படி எங்க அப்பா எடுத்துட்டு போனாருனா 2 நாள் ஆகிடுங்க. அந்த 2 நாள்ல பொழப்பும் போச்சு, விவசாயம் பாக்க முடியாது.
ஒரு ஸ்டேட் விட்டு ஸ்டேட் போகும் போது வீட்ல இருக்கறவங்க ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருந்தாங்க.
அப்படி பாக்கும்போது கொஞ்ச நாள் கழிச்சு தர்மபுரில பட்டுக்கூடு அங்காடி வந்ததுங்க. முன்னவிட 4-,5 மணி நேரம் போக்குவரத்து நேரம் கொறையும்.
ஆனாலும் ஒன்றரை நாள் ஆகிரும்.
பிற்பாடு சேலம்ல வந்ததுங்க. சேலம் காலைல போன 12 மணி நேரம் போல வீடு திரும்ப நைட் ஆகிருங்க. போக்குவரத்து எடஞ்சல், ரொம்ப சிரமப்பட்டுட்டு இருந்தோம்ங்க.
கடந்த சட்டமன்ற தேர்தல் முதல்வர் தேர்தல் வாக்குறுதி குடுத்தாரு. அதுல இராசிபுரம் பகுதில விவசாயிகளின் நலனுக்காக பட்டு அங்காடி கொண்டுவரதா வாக்குறுதி குடுத்தாருங்க. அந்த வாக்குறுதிபடியே கடந்த 10 மாசத்துக்கு முன்னாடி வந்து சுற்றுலாத்துறை அமைச்சரும், எம்.பி.யும், கலெக்டரும் சிறப்பா திறப்பு விழா செஞ்சு குடுத்தாங்க.
அங்காடி திறந்த பிறகு சுற்றுவட்டாரத்தில் விவசாயிக எல்லா வேலையும் பாத்துட்டு 10 மணிக்கு புறப்பட்டா இங்க 11 மணிக்கெல்லாம் வருவாங்க. பட்டுக்கூடு எல்லாம் ஸ்டேண்ட்ல கொட்டிவைக்க 11.30 மணி ஆகிரும். 12 மணிக்கெல்லாம் சரியா ஏலம் நடக்கும். ஏலம் முடிச்சதும் அரை மணி நேரத்துல வீட்டுக்கெல்லாம் போயிருவோம்.
இங்க அங்காடி வந்ததால எங்களுக்கு ரொம்ப நேரம் மிச்சம் ஆகுதுங்க. போக்குவரத்து செலவு குறையுது. எங்க விவசாயிகளோட சிரமத்த புரிஞ்சிட்டு அங்காடி அமச்சு குடுத்த முதல்வருக்கு ரொம்ப நன்றிங்க என்றார்.
“அங்காடியாலே பட்டு விவசாய விழிப்புணர்வு வந்துருச்சு”
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், ஆர்.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி பிரபு தெரிவித்ததாவது:
ஆர்.புதுப்பட்டி கிராமத்துல பட்டு விவசாயம் செஞ்சிட்டுவறோம். பட்டு விவசாயம் அப்பா காலத்துல இருந்து 35 வருசத்துக்கு மேல பண்ணிட்டுவறோம். அப்பா காலத்துல பட்டுக்கூடு விற்பனைக்காக வெளி மாநிலத்துல கொண்டுபோயி பட்டுக்கூடு விற்பனை செஞ்சிட்டிருந்தோம்.
அதுக்கு பிறகு தர்மபுரி மார்க்கெட்ல பட்டுக்கூடு விற்பனை செஞ்சிட்டிருந்தோம். தர்மபுரி மார்க்கெட் எங்களுக்கு 100 கி.மீ. தூரத்தில இருக்கு. அதனால எங்களுக்கு நேர விரயமும் பொருள் செலவும் அதிகமாக இருந்தது. இப்ப நாங்க இராசிபுரம் பட்டுக்கூடு மார்கெட்ல பட்டுக்கூடு விற்பனை செய்யறோம்.
இப்போ எங்களுக்கு பொருள் செலவும், நேர விரயமும் ரொம்ப குறைவா இருக்குது. காலையில வந்துட்டு பட்டுக்கூடு விற்பனை செஞ்சுட்டு மதியம்ல வீட்டுக்கு போற அளவுக்கு இந்த மார்கெட் எங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்குது.
முதல்வர் தேர்தல் அறிக்கையில் மாவட்டத்திற்கு ஒரு பட்டுக்கூடு விற்பனை அங்காடி என்ற வாக்குறுதியை குடுத்தாங்க. எங்களுக்கு இங்க பட்டுக்கூடு அங்காடியை நிறுவி குடுத்து இருக்காங்க. பட்டுக்கூடு அங்காடி நிறுவி தந்த முதல்வருக்கு ரொம்ப நன்றி.
இங்க பட்டுக்கூடு அங்காடி வந்த பிறகு பட்டு விவசாயம் பற்றி விவசாயிகள் மத்தியில நெறைய விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்குது. இங்க விற்பனை செய்ய மார்கெட் பக்கத்துல இருக்குனு உள்ளுர் விவசாயிகள் இப்போ அதிகமாக பட்டு விவசாயம் செய்யறாங்க.
இதுபோல விவசாயிகளுக்குனு அங்காடி அமச்சு தந்த முதல்வரு, அமைச்சரு, எம்.பி.க்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிச்சுக்கறோம் என்றார்.
தொகுப்பு:
சி.சீனிவாசன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
த.வடிவேல்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி),
நாமக்கல் மாவட்டம்.



