தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 1478 வாக்குச் சாவடிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2022-யை முன்னிட்டு வரைவு வாக்குச் சாவடி பட்டியல் 2021, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (செப்.14) வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
57-பாலக்கோடு தொகுதியில் 267 வாக்குச் சாவடிகள், 58-பென்னாகரம் தொகுதியில் 292 வாக்குச் சாவடிகள், 59-தர்மபுரி தொகுதியில் 306 வாக்குச் சாவடிகள், 60-பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 314 வாக்குச் சாவடிகள், 61-அரூர் (தனி) தொகுதியில் 299 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 1478 வாக்குச் சாவடிகள் உள்ளன.
வாக்குச் சாவடி நிலையங்களின் பெயர் மாற்றம், இடம் மாற்றம், 1500 வாக்காளர்களுக்கு மிகையாக இருப்பின் பிரித்தல் மற்றும் வாக்காளர்களின் இருப்பிடத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்திற்கு அதிகமாக உள்ள வாக்குச் சாவடி நிலையங்களைப் பிரித்து புதியதாக வாக்குச் சாவடி நிலையங்களை உருவாக்குதல் போன்ற விவரங்கள் இருந்தால் உடனடியாக அனுப்பி வைக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, முறையீடுகள், கோரிக்கைகளை வரும் 20-ம் தேதி முதல் 25-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகத்தில் எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



