fbpx
Homeபிற செய்திகள்இலவச பேருந்து பயணத் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் 4,17,164 மகளிருக்கு சலுகை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த...

இலவச பேருந்து பயணத் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் 4,17,164 மகளிருக்கு சலுகை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி

கட்டணம் இல்லாமல், இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் கடந்த 05.07.2021 முதல் 12.09.2021 வரை நீலகிரி மாவட்டத்தில், 4,17,164 பெண்களும், 2087 மாற்றுத்திறனாளிகளும், 317 மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்களும், 279 திருநங்கைகளும் பயணச்சலுகை பெற்றுள்ளனர்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரி மாவட்ட மக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் 07.05.2021 அன்று பொறுப்பேற்றவுடன் மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், ஐந்து முக்கிய அரசாணைகளை பிறப்பித்தார்.

முதலாவதாக கொரோனா காலத்தில் மக்களின் இன்னல்கள் மற்றும் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்ற ஆணையினையும், இரண்டாவதாக ஆவின் பால் விலையை, லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வீதம் குறைத்து விற்பனை செய்வதற்கான ஆணையிலும், மூன்றாவதாக தேர்தல் பரப்புரையின்போது மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை பெற்று அம்மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தினை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கும் ஆணையிலும், நான்காவதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பொதுமக்களின் நலன் கருதி மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்பதற்கான ஆணையிலும், ஐந்தாவதாக அரசு போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும், பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும் பேருந்து பயண அட்டை இல்லாமலும் மகளிர் பயணம் செய்வதற்கான ஆணையிலும் கையெழுத்திட்டார்.

ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு மகளிரின் பங்களிப்பு இன்றிய மையாததாகும். தற்போதைய மாறி வரும் சமூக பொருளாதார சூழ்நிலையில் மகளிர் உயர்கல்வி பெறுவதற்கும், குடும் பத்தின் பொருளாதார தேவையை நிறை வேற்றுவதற்காக பணிக்கு செல்லவும், சுய தொழில் செய்வதற்கும் போக்குவரத்து தேவை இன்றியமையாததாகும்.

தமிழகத்தில் ஆண்கள் விகிதத்தை கணக்கில் கொள்ளும் பொழுது, பணிபுரியும் பெண்களின் விகிதம் பெருமளவு குறைவாகவே உள்ளது.

பொரு ளாதார வளர்ச்சிக்கு மகளிரும் சிறப்பான பங்களிப்பினை நல்க இயலும் என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் பணிகளில் மகளிரின் பங்கினை உயர்த்த வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

40 சதவீத நகரப் பேருந்து
எனவே, உயர்கல்வி கற்பதற்காகவும், பணி நிமித்தமாகவும் பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு பாதுகாப்பான பயணங்களை அமைத்துக் கொடுப்பதும், பொது போக்குவரத்து பயணங்களை ஊக்குவிப்பதும் மேற்கூறிய பொருளாதார தேவைகளுக்கு உகந்ததாக அமைந்துள்ளது.

பணிபுரியும் மகளிர் மற்றும் உயர்கல்வி பயிலும் மகளிர் 40 சதவீதம் நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய வாய்ப்புள்ளதால், இலவசமாக பயணச் சலுகை வழங்கப்படுகிறது.

இழப்பை ஈடு செய்ய மானியம்
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பணிபுரியும் மகளிர் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும், பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் ஆண்டொன்றுக்கு அரசு போக்கு வரத்துக் கழகத்திற்கு ஏற்படவுள்ள ரூ1200 கோடி இழப்பினை ஈடுசெய்யும் பொருட்டு இழப்புத் தொகையினை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியமாக வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் கடந்த 05.07.2021 முதல் 12.09.2021 அன்று வரை 4,17,164 பெண்களும், 2087 மாற்றுத்திறனாளிகளும், 317 மாற்றுத்திறனாளி களின் உதவியாளர்களும், 279 திருநங்கைகளும் பயணச் சலுகை பெற்றுள்ளனர்.

மகளிருக்கு பெரிய உதவி
இலவச பேருந்து பயணச் சலுகை பெற்ற பயனாளி சரோஜா கூறியதாவது:
உதகை ஆர்.கே.புரம் பகுதியில் வசித்து வருகிறேன். தோட்ட வேலை செய்து வருகிறேன். வேலை செய்யும் தோட்டங்களுக்கு செல்ல தினமும் பேருந்தில் தான் பயணம் செய்ய வேண்டும்.

எனவே எனக்கு ஒருநாளைக்கு பேருந்து கட்டணமாக ரூ.30 வரை செலவாகும். இலவச பேருந்து கட்டணம் அறிவித்ததன் மூலம் எனக்கு போக்குவரத்து செலவிற்கான தொகை மீதமாகிறது.

தேர்தல் சமயத்தில் முதல்வர் அளித்த வாக்குறுதியின்படி, பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்தி எங்களை போன்ற மகளிருக்கு உதவி செய்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமும் ரூ.40 சேமிப்பு
இலவச பேருந்து பயணச் சலுகை பெற்ற பயனாளி சுமித்ரா கூறியதாவது:
குன்னூர் மவுண்ட்பிளசண்ட் பகுதியில் வசித்து வருகிறோம். என் கணவர் கூலி வேலை செய்து வருகிறார்.

கணவரின் வருமானம் போதுமானதாக இல்லாத காரணத்தினால், காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். அதிக தூரம் செல்ல வேண்டியுள்ள காரணத்தினால், தினமும் பேருந்தில் தான் பயணம் செய்வேன்.

எனக்கு ஒரு நாளைக்கு பேருந்து பயண கட்டணம் ரூ.40 வரை செலவாகும். எனவே அன்றாடம் வரும் வருமானத்தில் இருந்து, பேருந்து பயணத்தில் பயணம் செய்ய தேவையான தொகையை எடுத்து வைத்து கொள்வேன்.

தற்போது, முதல்வர் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி, பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்தி செயல்படுத்தியதின் மூலம், கட்டணமில்லாமல் பயணம் செய்து வருகிறேன்.

எனவே அந்த பேருந்து கட்டண தொகையினை எனது குழந்தைகளுக்காக சேமித்து வைத்து கொள்கிறேன். பெண்களுக்கு பயன்படக்கூடிய வகையில் இந்த திட்டத்தினை வழங்கிய முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்களின் பாதுகாப்புக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு நீலகிரி மாவட்ட மக்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறார்கள்.

தொகுப்பு
நி.சையத் முகம்மத்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
ஓ.ர.மனோஜ்குமார்
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
நீலகிரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img