fbpx
Homeதலையங்கம்24 மணி நேரமும் பறக்கும் ட்ரோன்

24 மணி நேரமும் பறக்கும் ட்ரோன்

21 ஆம் நூற்றாண்டில் மக்கள் பயன்பாட்டிற் காக பல்வேறு துறைகளில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிறிய அளவிலான இந்த ட்ரோன்கள் அவசர நேரங்களில் மருந்து மற்றும் உணவு பொருள்களை விநியோகம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ட்ரோன்கள் சிறிது தூரம் மட்டுமே பறக்கும் திறன் படைத்தவையாக தற்போதைக்கு உள்ளன. இந்நிலையில் தென்சீனாவின் குவாங் டாங் மாகாணத்தில் செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்கிய ராணுவ விமானங்களின் கண்காட்சியில் இடம் பெற்ற பல்வேறு வகையிலான ட்ரோன்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தின.

அதிலும் ராணுவ தளவாடங்களுடன் தொடர்ந்து 24 மணி நேரம் பறக்கும் திறன் கொண்ட பிரம்மாண்டமான சிஹெச்6 ட்ரோன் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிகபட்சமாக மணிக்கு 700 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக்கூடிய இந்த ட்ரோனில் 7.8 டன் எடை கொண்ட ராணுவ தளவாடங்கள், ரேடார்கள், குண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு செல்லலாம்.

நிலத்தில் இருந்து நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்கும் அளவுக்கு இதில் நவீன பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி நீர் மூழ்கிக் கப்பல்களை கண்டு பிடிப்பதிலும், கடல்சார் பாதுகாப்பில் ரோந்து மேற்கொள்ளவும், பேரிடர்களை எச்சரிக்கும் பணிகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம் என்று இந்த ட்ரோனை உருவாக்கிய சிஹெச் ஆளில்லா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல் உலகிலேயே சிறிய அளவிலான சிஹெச்:817 என்ற ட்ரோனும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. வெறும் 800 கிராம் எடையிலான இந்த ட்ரோனை வேறு ஆளில்லா விமானத்தில் இருந்து செலுத்தி தாக்குதல் நடத்தலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருவர் மட்டும் அமர்ந்து செல்லும் வகையில் ட்ரோன் ஆம்புலன்ஸ் உருவாக்கமும் சோதனையில் உள்ளது.

இப்படி ட்ரோன் தொழில்நுட்பம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் நிலையில் ஆஸ்திரேலியாவில் உணவுப் பொருள் விநியோகம் செய்யச் சென்ற ட்ரோனை காகம் ஒன்று தாக்கும் சம்பவமும் பதிவாகியுள்ளது.

அந்நாட்டின் புறநகர்ப் பகுதியான ஹாரிசான் மாகாணத்தில் காபியை விநியோகம் செய்யச் சென்ற ட்ரோனை காகம் தாக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலானது.

படிக்க வேண்டும்

spot_img