2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்யும் அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்குப் பதிலாக புதிய வர்ணங்களில் 200 ரூபாய், 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன.
எங்கு பார்த்தாலும் 2,000 ரூபாய் தாள்களே நிறைந்திருந்த நிலையில் சில்லறைக்காக மக்கள் அலையும் நிலை இருந்தது. ஆனால், அண்மைக் காலமாக அழகிய, சிறிய, 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கி ஏடிஎம்கள், வங்கி பயன்பாடுகளில் இருந்தும் அருகத் தொடங்கியுள்ளன.
ஊழலையும், கருப்புப் பணத்தையும் ஒழிக்கிறோம் எனக் கூறி 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
ஆனால் புதிய தலைவலியாய் அதிக முகமதிப்பு கொண்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டு அச்சடிப்போரின் முதல் சாய்ஸாக மாறியதாக புகார்கள் எழுந்தன. இதனிடையே, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறையத் தொடங்கியது.
இது தொடர்பாக கருத்து கூறும் பொருளாதார நிபுணர்கள் 2 ஆயிரம் ரூபாய் புழக்கத்தை குறைத்து, 500 ரூபாய் புழக்கத்தை அதிகரிக்க அரசு முடிவெடுத்திருக்கலாம் என்கின்றனர்.
கடந்த 3 நிதியாண்டுகளாக 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி முற்றிலும் நிறுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, 2016-17 ம் நிதியாண்டில் 353 கோடி எண்ணிக்கையிலான 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதாகவும் 2017-18-ல் அது 11 கோடியாக குறைந்ததாகவும், அதற்கு அடுத்த நிதியாண்டில் 4.6 கோடி 2,000 ரூபாய் நோட்டுகளே அச்சடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம், 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக குறைக்கப்பட்டிருப்பது தெளிவாகியுள்ளது.
எனினும், ரிசர்வ் வங்கி 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலத்தில் வெளியிட்ட 1,217 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் எங்கே சென்றன என்ற பெரும் கேள்வியெழுந்துள்ளது; பெரும் புதிராக உள்ளது.
இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் மனோரஞ்சன் ராய். பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 2018ம் ஆண்டு நிலவரப்படி ஒட்டுமொத்த பணப்புழக்க மதிப்பில் 37.26 சதவீதம் ஆக இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை இன்று பார்ப்பதே அரிதாக மாறியுள்ளது.
2,000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு ரகசியமாக மூடு விழா காண்பதாக சந்தேகம் எழும் அதேவேளையில், இதுவரை அச்சிடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள் எங்கே போயின என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா?