சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 840 முதல் 1,250 விவசாயிகள், 230 முதல் 250 மெ.டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.50 இலட்சம் முதல் ரூ.60 இலட்சம் மதிப்பில் விற்பனை செய்கின்றனர். 4,374 எண்ணிக்கையிலான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாதுஎழுவாரை எல்லாம் பொறுத்துஉழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யும் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால், இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர் என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க, விவசாயிகளை விற்பனையாளர்களாக ஏற்றம் காணும் உன்னத முயற்சியில், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், பொதுமக்கள் அன்றாடம் விளையும் காய்கறிகளை அன்றே வெளிச்சந்தை சில்லறை விலையை விட குறைவான விலையில் பெறுவதற்கு ஏதுவாக, முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கிய உழவர் சந்தை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உணவே மருந்து’ என்ற அடிப்படையில் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
இதில் வேளாண்மை துறைக்கு முக்கியத்துவம் அளித்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவது விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உழவர் நலச்சந்தை குறித்து ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்ததாவது:விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்லவிலை கிடைக்கவும், பொதுமக்கள் அன்றாடம் விளையும் காய்கறிகளை அன்றே குறைவான விலையில் பெறுவதற்கும் ஏதுவாக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் உழவர் சந்தைகள் புதுப்பொலிவுடன் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாபட்டி, ஆத்தூர், ஆட்டையாம்பட்டி, அம்மாபேட்டை, மேட்டூர், அஸ்தம்பட்டி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஜலகண்டாபுரம், எடப்பாடி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.
நாளொன்றுக்கு 840 முதல் 1,250 விவசாயிகள், 230 முதல் 250 மெ.டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.50 இலட்சம் முதல் ரூ.60 இலட்சம் மதிப்பில் விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் 56,000 முதல் 60,000 பொதுமக்கள் பயன்பெறுகின்றனர்.
காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளை கண்டறிந்து, அவர்களது விளைபொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக அடையாள அட்டை வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகளில் மொத்தம் 4,374 எண்ணிக்கையிலான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 1,477 விவசாயிகளின் பழைய அட்டைகளை புதுப்பிக்க ஆவணங்கள் பெறப்பட்டு கள ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 1,366 பழைய அட்டைகளின் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு புதிய உழவர் சந்தை அடையாள அட்டை அக்டோபர் 2022-க்குள் வழங்கப்பட உள்ளது. சூரமங்கலம், தாதகாபட்டி, ஆத்தூர், அம்மாபேட்டை உழவர் சந்தைகளில் உள்ள குளிர்பதன கிடங்குகளில் ஜூலை 2022 முடிய 60,442 கிலோ காய்கறி, பழங்கள் இருப்பு வைத்து 2,796 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதில் தாதகாபட்டி, அம்மாபேட்டை உழவர் சந்தைகளில் ரூ.49 இலட்சத்தில் புனரமைத்தல் பணிகளும், ஆத்தூர், அம்மாப்பேட்டை உழவர் சந்தைகளில் ரூ.22 இலட்சத்தில் காய்கறி கழிவுகளிலிருந்து உரமாக்கும் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.“நடமாடும் வாகனங்கள்”தரமான காய்கறிகள், பழங்கள் பண்ணையிலிருந்து நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே நேரடியாக விற்பனை செய்யும் நடமாடும் உழவர் சந்தை திட்டத்தில் புதிய நான்கு சக்கரவாகனம் (Tata Ace (New) மானியம் – 40 % அல்லது ரூ.2 இலட்சம் / வண்டி இதில் எது குறைவோ அதன் படி வழங்கப்படும்.
இத்திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 6 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வாகனங்கள் வாங்கி, மாதிரி வாகனம் போல வடிவமைக்கப்பட்டு திட்டம் செயல்பட தயார் நிலையில் உள்ளது. சூரமங்கலம், அம்மாபேட்டை, தாதகாப்பட்டி உழவர்சந்தைகளில் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களின் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய சிறப்பு அங்காடிகள் கட்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் தங்களது கணினி விண்ணப்பம், சிட்டா அல்லது பதிவு பத்திரம், அடங்கல், புல வரைபடம் (FMB), பழைய அடையாள அட்டை நகல், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் (2 எண்கள்) ஆகியவற்றை தொடர்புடைய உழவர் சந்தைகளில் சமர்ப்பிக்க வேண்டும். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக அலுவலர்களின் ஆய்விற்குப் பின்னர் புதிய உழவர் சந்தை அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றார் ஆட்சியர் செ.கார்மேகம்.



