fbpx
Homeபிற செய்திகள்வாளையாறு சோதனைச் சாவடியில் கோவை ஆட்சியர் சமீரன் ஆய்வு

வாளையாறு சோதனைச் சாவடியில் கோவை ஆட்சியர் சமீரன் ஆய்வு

கொரோனா பரவலைத் தடுக்கும் விதத்தில் கோவை மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், வாளையாறு சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், எஸ்.பி.செல்வநாகரத்தினம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

கேரளத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 5 நாள்களாக கோவை மாவட்டத்திலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதில் முக்கியமாக கேரள எல்லையில் உள்ள 13 சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளத்தில் இருந்து கோவை வருவோர் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

சான்றிதழ் இல்லாமல் வருவோருக்கு சோதனைச் சாவ டியிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இதில் கேரளத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கோவை வந்த 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்கள் வெளியே செல்ல அனுமதி இல்லை. அவர்களை சுகாதார ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். அத்தியாவசிய தேவையின்றி கோவை வருவோரின் முகவரி விவரங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வாளையாறு சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு மேற் கொண்டனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் பணிகள் மற்றும் பரிசோதனை விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொள்ளாச்சி&வால்பாறை இடையே உள்ள ஆழியாறு சோதனை சாவடியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் ஒரு வார காலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

இதனையடுத்து வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியாறு சோதனைச் சாவடியில் காவல் துறை மற்றும் சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

வால்பாறைக்கு வரும் வாகனங்களை சோதனையிட்டு அவர்கள் அங்கு வசிப்பதற்கான உரிய ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டும் அனுமதித்து வருகின்றனர்.

மேலும் அரசுப் பேருந்துகளையும் நிறுத்தி பயணிகளிடம் விசாரித்து வருகின்றனர்.
தடை விதித்திருப்பது தெரியாமல் வந்த ஏராளமான வாகனங்களை திருப்பி அனுப்பினர். வால்பாறை சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாபு லஷ்மணன் சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img