மாநிலத் திட்டக் குழு ஆய்வுக் கூட்டம் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. முதலமைச்சரும், தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை யில் இன்று சென்னை, சேப்பாக்கம், எழிலகம், மாநிலத்திட்டக்குழு அலுவலகத்தில் துறை சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பான இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வின்போது, மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன், குழுவின் செயல்பாடுகள், புதிய கொள்கைகள், தமிழ்நாடு புத்தாக்கத் திட் டங்கள், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டங்கள், இது தொடர்பான உறுப்பினர்கள் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட துறை வாரியான ஆய்வுகள், கள ஆய்வுகள் மற்றும் அரசு துறை செயலாக்க ஆலோசனைகளைப் பற்றி விளக்கினார்.
மாநிலத் திட்டக் குழு ஆய்வுக் கூட்டத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
புதிய அரசு பொறுப் பேற்றதும் மாநில திட்டக் குழுவை புதி தாக அமைத்தோம். பேராசிரியர் ஜெயரஞ்சன் உள் ளிட்ட பல்துறையைச் சேர்ந்தவர்கள் இக்குழுவில் இடம்பெற்றீர்கள். உங்கள் அனைவரது பணியும் கடந்த ஆறு மாத காலமாக ஆக்கப்பூர்வமாக அமைந்து வருவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். முதலமைச்சர் அலுவல கத்தோடும் அமைச்சர்களோடும் -அரசுச் செயலாளர்களோடும் -நீங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறீர்கள். அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான பல ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் நீங்கள் வழங்கி வருகிறீர்கள் என்பதை நான் அறிவேன். இதே உற்சாகத்தோடு நீங்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
உங்களது பணி என்பது மிக மிக முக்கியமானது. நீங்கள் வழிகாட்டும் இடத்தில் இருக்கிறீர்கள். கைகாட்டியாக – கலங்கரை விளக்கமாக – இருக்கிறீர்கள். எனவே தான் உங்கள் பணியை மிக மிக முக்கியமானது என்று சொன்னேன். உங்களி டம் இருந்தும் இன்னும் கூடுதலாக பல்வேறு வழி காட்டுதல்கள் எங்களுக்கு வேண்டும் என்பதைச் சொல்வதற்காகத்தான் நான் இங்கு வந்துள்ளேன். மாநில வளர்ச்சிக் கொள் கைக் குழுவைச் சார்ந்த நீங்கள் அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளைச் சொல்கிறீர்கள். இது போன்று செய்யலாம் – அது போல திட்டமிடலாம் – என்று உங்களிடம் இருந்து ஆலோசனைகள் எங்களுக்கு வருகின்றன.
உங்களிடம் இருந்து வரும் எண்ணங்கள் ஆலோசனைகளாக மட்டு மில்லாமல் அந்த எண்ணம் குறித்த முழுமையான செயல்வடிவமாக எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். புதிய புதிய எண்ணங்கள் உங்களுக்குத் தோன்றலாம். அந்த எண்ணம் குறித்து அது பற்றிய வல்லுநர் குழுவுடன் நீங்களே ஆலோசனை நடத்தலாம். குறிப்பிட்ட தொழிற்சாலைகளுக்கு நீங்களே போய் பார்க்கலாம்.
அதன் நீள அகலங்கள் அனைத் தையும் நீங்களே தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு அவற்றை மேம்படுத்த அதனை அரசுக்கு உங்களது திட்ட அறிக்கையாக நீங்கள் வழங்கலாம். அதாவது ஒரு ஆலோசனையை நீங்கள் சொல்லும் போது அதன் ஏ டூ இசட் அனைத்தையும் நீங்களே அலசி ஆராய்ந்து எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதற்கு துறை வாரி யான வல்லுநர்களை நீங்கள் சந்திக்கலாம். கலந்துரை யாடல் நடத்தலாம். வெளிமாவட்டங்களுக்குச் சென்று நீங்களே விவசாயிகளை, தொழிலதிபர்களை, இளைஞர்களை சந்திக்கலாம். அவர்களது ஆலோச னையையும் பெறலாம். இவ்வாறான செயல் முறைத் திட்டங்களோடு நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மிக முக்கியமான ஆலோசனையாக இருந்தால் அது குறித்த முழுமையான பரிசீலனைக்குப் பிறகு நீங்கள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகம் பல்வேறு வகைகளில் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. அது நமக்கு பெருமை தருவதாகும். வளர்ச்சித் திட்டங்களையும் சமூக சீர்திருத்தத்தையும் இணைத்ததால் நம் மாநிலம் அடைந்த மாபெரும் பலன் அது. அதே நேரத்தில் முழுமையாக முன்னேற்றம் அடைந்துவிட்டோமா என்றால் இல்லை. அத்தகைய முழுமையான முன்னேற்றத்தை அடையத் தேவையானவை குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும்.
மனிதவள மேம்பாடு, வாழ்க்கைத் தரம், மனித வாழ்க்கையின் ஆயுள், கல்வி கற்றல், குழந்தைகள் வளர்ப்பு, வறுமை ஒழிப்பு, மக்கள் நலவாழ்வு, மனித உரிமைகள், சமூகநீதி, விளிம்பு நிலை மக்கள்… – இப்படி அனைத்து தரப்புகளிலும் நாம் மேம் பட்டவர்களாக மாற வேண்டும்.
இத்தகைய குறியீடு களை தமிழகத்தில் மேம்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக் கைகளை மேற்கொள்ள அரசு முனைப்போடு இருக்கிறது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து நீங்கள் அரசுக்கு வழங்க வேண்டும்.
திட்டங்களை உருவாக்கு வதற்கும் – அதனை நடைமுறைப்படுத்து வதற்குமான கால இடைவெளியைக் குறைக்க வேண்டும். தமிழகத்தின் நிதி நெருக்கடியை நான் சொல்லத் தேவையில்லை. அநாவசியச் செலவுகளைக் குறைப்பது குறித்த ஆலோசனைகள் தேவை. நிதி திரட்டுதல் என்பது முக்கியமாக வரிவசூல் – பத்திரப்பதிவு – ஆயத் தீர்வை ஆகியவற்றின் மூலம் மட்டுமே வருகிறது. அத னைத் தாண்டி சுற்றுலா – சிறுகுறு தொழில்கள் – கைவினைப் பொருள்கள் – கைத்தறி போன்ற துறைகளின் மூலமாகவும் வருமானம் ஈட்டுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
தொழில் உருவாக்கம் என்பது நிதி உருவாக்கமாகவும், வேலை வாய்ப்பு பெருக்கமாகவும் மாற வேண்டும்.
கிராமப்புற மேம்பாடு குறித்து அக்கறையோடு நீங்கள் சிந்திக்க வேண்டும்.- இப்படி எத்தனையோ வகைகளை நீங்கள் சிந்தித்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.



