fbpx
Homeபிற செய்திகள்பழங்குடி மக்களுக்காக கட்டணமில்லா தொலைபேசி சேவை துவக்கம்

பழங்குடி மக்களுக்காக கட்டணமில்லா தொலைபேசி சேவை துவக்கம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, காணொலி காட்சி வாயிலாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில், தமிழ்நாடு வனத்துறை முதன் மைச் செயலர் சுப்ரியா சாகு இயக்குநர் பழங்குடியினர் நலத்துறை வி.சி.ராகுல் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷாவா ஆகியோர் முன்னி¬ லயில், கட்டணமில்லா தொலை பேசி சேவை துவக்க விழா நேற்று (ஆக.9) நடைபெற்றது.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்ததாவது:
முதல்வர் ஆணைக்கிணங்க தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை உயர்த்துவத ற்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காலங்காலமாக ஆதிக்க சக்திகளாலும் உயர் சாதி பிரிவினர்களாலும் சமூக ரீதியாவும் பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகமாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மக்கள் இருந்து வந்தார்கள்.

இதனை இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கு மேலாகவே தட்டிக்கேட்டு இவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்காக டாக்டர் அம்பேத்கர் பாடுபட்டார்.

அதேபோல் தமிழகத்தில் காலங்காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூக மக்களை சமூகத்தில் எல்லா நிலையிலும் முன்னேற்றம் அடைய பாடுபட்ட இயக்கம் தான் 100 ஆண்டு கால சரித்திரம் பெற்ற நீதிக்கட்சி மற்றும் அதன் தலைவர்கள்.

அதன் தொடர்ச்சியாகத் தான் தமிழகத்தில் தலைவர்கள் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோர் 50 ஆண்டுகளுக்கு மேலாக பாடுபட்டு வந்தார்கள்.

இன்றைக்கு பெரியார் அண்ணா கலைஞர் வழியில் முதல்வர் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றம் அடைய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் சுமார் 7.95 லட்சம் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 36 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த பழங்குடியின மக்களின் நலனைப் பேணும் வகையில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் பழங்குடி நல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

டாக்டர் கலைஞர் தமிழகத்தில் முதல்வராக இருந்த பொழுதுதான் பழங்குடியினர் மக்கள் நலன் கருதி பழங்குடியினர் ஆன்றோர் மையம் மற்றும் பழங்குடியினர் நல வாரியம் அமைக்கப்பட்டது.

பழங்குடியினர் மக்களுக்கு குடிசை வீடுகளுக்கு பதிலாக கான்கீரிட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு மின்சாரம் இல்லாத பகுதிகளுக்கு மின்சாரம் வசதியும் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் சுகாதாரத் துறையின் மூலம் கொரோனா என்ற கொடிய நோயில் இருந்து பழங்குடியின மக்களைப் பாதுகாக்க, தமிழகம் முழுவதும் இவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 100சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த 1982-ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை ஆகஸ்ட் 9-ம் தேதியை பழங்குடிகள் தினமாக கடைபிடித்து வருகிறது.

பழங்குடியினரின் சமூகத்தில் பொருளாதாரம் சமூக முன்னேற்றம் கலாச்சாரம் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்பு சுகாதாரம் பேணல் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி வளர்ச்சி ஆகியவற்றிற்கு தமிழக அரசுடன் அனைவரும் சேர்ந்து ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்பதே இந்த நிகழ்வின் நோக்கம்.

தமிழக அரசு பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கிய 318 பள்ளிகளில் 2319 மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இதில் ஏகலைவ உண்டு உறைவிடப்பள்ளி 8-ம் அதில் 2502 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். மாணவ, மாணவியர்களுக்கு 43 விடுதிகளில் 2132 மாணவ, மாணவியர்கள் தங்கிப் பயில்கின்றனர்.

இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வரும் சர்வதேச பழங்குடி மக்கள் தினத்தையொட்டி நாவா அமைப்பின் சார்பில், பழங்குடியின மக்களுக்காக (180042-51576) என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவை துவங்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணமில்லாத தொலைபேசி இணைப்பு மூலம் பழங்குடியின மக்கள் தங்களுக்கான பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.

இந்தியாவிலேயே முதன் முறையாக பழங்குடியின மக்களுக்கு இந்த கட்டணமில்லா தொலைபேசி சேவையை ஏற்பாடு செய்த நாவா அமைப்பிற்கு முதல்வர் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரி வித்தார். இதனைத் தொடர்ந்து நாவா அமைப்பின் சார்பில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் நினைவு பரிசினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நாவா அமைப்பின் தலைவர் மரு.ராஜலட்சுமி சுப்பிரமணியம் பாரதியார் பல்கலைகழக பேராசிரியை லவ்லீணா சென்னை பல்கலைகழக பேராசிரியர் முனைவர் தாமோதிரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img