fbpx
Homeபிற செய்திகள்பத்திரப் பதிவுக்கு ‘தட்கல்’ முறை அறிமுகம்

பத்திரப் பதிவுக்கு ‘தட்கல்’ முறை அறிமுகம்

பொதுவாக முகூர்த்த நாட்கள் உள்ளிட்ட நல்ல நாட்கள் என கருதப்படும் நாட்களில் சில சார்பதிவாளர் அலுவலகங்களில் நூறு பத்திரப் பதிவுக்கான டோக்கன்களும் முன்பதிவு செய்யப்பட்டு விடுகின்றது.

இதனால் நல்ல நாட்களில் பலர் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். அதேபோன்று குறுகிய கால அவகாசத்தில் பத்திரப் பதிவை மேற்கொள்ள விரும்புபவர்களும் டோக்கன்கள் பெற முடியாத நிலை உள்ளது.

இதைத் தவிர்க்க தட்கல் முறையில் ரூ.5 ஆயிரம் செலுத்தி தாங்கள் விரும்பும் நாட்களில் பத்திரப் பதிவை மேற்கொள்ளும் திட்டத்தை பதிவுத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

தட்கல் திட்டத்தின் கீழ் டோக்கன் பெறுபவர்களின் பத்திரங்கள் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேர இடைவெளியின் முடிவில் பதிவு செய்யப்படும். தட்கல் டோக்கன்களும் தற்போதைய செயல்முறை போலவே நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த முறைப்படி தற்போதைய டோக்கன்களுடன் தட்கல் டோக்கன்களும் எந்த நாட்களிலும் கூடுதல் டோக்கன்களாக முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

தட்கல் திட்டத்தின்கீழ் பதிவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பத்திரப்பதிவுக்காக குறிப்பிட்ட நபர்கள் வராத பட்சத்தில் அதற்காக செலுத்தப்பட்ட கட்டணம் திரும்ப வழங்கப்படாது.

சாதாரண பதிவுக்கான டோக்கன் பெற 2 மாதத்திற்கு முன்னதாக பதிவு தொடங்குவது போன்று தட்கல் திட்டத்தின் கீழும் 2 மாதத்திற்கு முன்னதாக பதிவு தொடங்கும்.

தட்கல் திட்டம் முதல் கட்டமாக 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

இத் திட்டத்தின்கீழ் காலை 10 முதல் 1.30 மணி வரையிலான நேரத்தில் ஒரு பத்திரப்பதிவும், 2 மணி முதல் 3 மணி வரையிலான நேரத்தில் 2 பத்திரப்பதிவும், 3 மணிமுதல் 3.30 மணி வரையிலான நேரத்தில் ஒரு பத்திரப்பதிவும் மேற்கொள்ளப்படும்.

எனவே இத்திட்டம் அவசர கதியில் மற்றும் நல்ல நாட்களில் பதிவு மேற்கொள்பவர்களுக்கான ஒரு நல்ல ஏற்பாடாகக் கருதலாம். எனவே இது வரவேற்கத்தக்கதே!

படிக்க வேண்டும்

spot_img