தருமபுரி மாவட்டத்தில் கடந்த 18-ம் தேதி வரை, ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தின் கீழ் 2185 நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டத்தில் பயன்பெற 52214 பேர் பதிவு செய்துள்ளனர்.
முதல்வர் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாரம், சாமனப்பள்ளி கிராமத்தில், கடந்த 5-ம் தேதி ‘மக்களை தேடி மருத்துவம்’ எனும் மாபெரும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின்படி ஒருங்கிணைந்த மற்றும் விரிவான இல்லம் தேடி வரும் மருத்துவ சேவைகள் வாயிலாக, நோய் சிகிச்சைக்கான தொடர் கவனிப்பு, நிலையான சேவைகளை உறுதி செய்வதுடன் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் சுகாதார தேவைகளை கண்டறிந்து ஆவன செய்யப்படும்.
சமுதாய நலப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளி பற்றியும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்துவது இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.
தமிழ்நாடு மாநிலம் 2030-ம் ஆண்டிற்கான நிலைத்த வளர்ச்சி இலக்குகளில் மகப்பேறு,குழந்தை நலம் மற்றும் விபத்து சிகிச்சை இனங்களில் போதிய முன்னேற்றம் கண்டுள்ள போதும், தொற்றா நோய்களால் ஏற்படும் இறப்பினை தவிர்க்கக்கூடிய வகையில் மூன்றில் ஒரு பங்கு என்ற இலக்கை அடைவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள இத்திட்டம் பயனுள்ளதாக அமையும்.
தமிழ்நாடு சுகாதார மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் 2020-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட, மாநிலத்தில் தொற்றா நோய்களின் சுமை மற்றும் சமூகத்தில் அவற்றின் கட்டுபாட்டு விகிதம் குறித்த கணக்கெடுப்பில், தமிழகத்தில் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 33.8 விழுக்காடு.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 17.6 விழுக்காடு என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தொற்றா நோய்களுக்கு சிகிச்சை எடுத்து கொள்பவர்களில் நோய் கட்டுப்பாட்டில் உள்ளவர்களின் விகிதம் மிகக்குறைவாக உயர் இரத்த அழுத்தம் 7.3 விழுக்காடாகவும், நீரிழிவு நோய் 10.8 விழுக்காடாகவும் உள்ளது.
ஏற்கனவே பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளை களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள் இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார தேவைகளையும் வழங்குவதுடன், தொடர்ந்து கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கள அளவிலான குழுவில், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதாரச் சேவையாளர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவுச் செவிலியர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பொது சுகாதாரத் துறையின் களப்பணியாளர்கள், இக்குழுவினரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்துவார்கள்.
இத்திட்டமானது அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 50 ஊரக வட்டாரங்களில் உள்ள 1172 அரசு துணை சுகாதார நிலையங்களிலும், 189 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் 50 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை, கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய 3 மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலத்தில் உள்ள 106 பகுதி சுகாதார நிலையங்களிலும் மற்றும் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக தமிழ்நாடு மகளிர் கழக மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 1264 பெண் சுகாதாரத் தன்னார்வலர்களும், 50 இயன் முறை மருத்துவர்களும், 50 நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர்களும், இல்லம் தேடி வரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு வட்டாரத்திலும் இத்திட்டத்திற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் பயனாளிகளின் சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் கண்டறியப்படும் தொற்றா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகள், இல்லங்களில் தொடங்கி, தொடர்ந்து அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ள 2432 தொற்றா நோய் செவிலியர்கள் 4462 மருந்தாளுநர்கள் மற்றும் 19583 மருத்துவ அலுவலர்களின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
தொற்றா நோய்கள் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் செலவினங்கள் நீங்கலாக இத்திட்டத்தினை ஊரக மற்றும் நகர்புறங்களில் செயல்படுத்துவதற்காக ரூ.258 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் பல்வேறு திட்டத் தலைப்புகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டினைக் கொண்டும் தமிழ்நாடு சுகாதார மறுசீரமைப்பு திட்டத்தின் கூடுதல் நிதி ஆதரவுடனும் ‘மக்களை தேடி மருத்துவம்’ செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் முதற்கட்ட இலக்கான 30 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு கோடி மக்கள் பயன்பெறுவதன் மூலம், ஆண்டு இறுதியில் மாநில அளவில் 30 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு கோடி மக்கள் மக்கள் பயன்பெறுவதன் மூலம் அனைவருக்கும் நலவாழ்வு என்ற உயரிய இலக்கை அடைய இந்த திட்டம் வழிவகுக்கும்.
‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற சிறப்பான திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டாரத்தில் உள்ள 8774 தொற்றா நோயாளிகள் 96 இயன்முறை சேவைகள் மற்றும் 73 நோய் ஆதரவு சேவைகள் தேவைப்படும் நோயாளிகள் பயன்அடைய உள்ளனர்.
தற்போது தும்பலஅள்ளி அகதிகள் முகாமில் வசித்து வரும் 197 குடும்பங்களில் உள்ள 59 தொற்றா நோயாளிகள் 2 இயன்முறை சேவைகள் மற்றும் 2 நோய் ஆதரவு சேவைகள் தேவைப்படும் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டம் தருமபுரி மாவட்டம் முழுவதும் விரிவாக்கம் செய்யும்போது, அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பதிவு செய்துள்ள 52214 தொற்றா நோயாளிகள் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயன் பெற உள்ளனர்.
‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற சிறப்பான திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் நாளதுவரை (18.08.2021) உயர் இரத்த அழுத்த நோயாளிகள் 1132 பேரும், நீரிழிவு நோயாளிகள் 577 பேரும், இரண்டு நோய்களும் சேர்ந்து 312 பேரும், இயன்முறை சேவை 82 பேரும் இதர நோயாளிகள் 82 பேரும் என மொத்தம் 2185 நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர்.
கால் வலியுடன் நடந்தேன்
மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி தும்பலஅள்ளி அகதிகள் முகாமில் வசித்து வரும் காமாட்சி (வயது 67) தெரிவித்ததாவது:
எனக்கு கடந்த பத்து ஆண்டுகளாக இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளது.
நான் இதுவரை 10 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன்.
குறிப்பாக எனக்கு கால் வலி அதிகம் உள்ள நிலையில் நடக்க முடியாத சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டு பேருந்தில் சென்று சிகிச்சை பெற்று வந்தேன்.
இப்போது முதல்வர் எங்களை போன்ற குறிப்பாக வயதானவர்கள் பயன்பெறும் வகையில் வீட்டிற்கே நேரடியாக வந்து மருந்துகளை வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இதனால் என்னை போன்ற வயதானவர்களுக்கு செவிலியர்கள் எங்களின் வீட்டிற்கே வந்து சிகிச்சை அளித்து எனக்கு இரண்டு மாதத்திற்கு தேவையான மருந்து மாத்திரை வழங்கினார்கள்.
கொரோனா காலத்தில் வீட்டிற்கே நேரடியாக வந்து சிகிச்சை அளித்து தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கிட மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை உருவாக்கித் தந்துள்ள முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊரடங்கில் வீட்டுக்கே வந்து சிகிச்சை
மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி தும்பலஅள்ளி பகுதியில் வசித்து வரும் சிவஞான சுந்தரம் (வயது63) தெரிவித்ததாவது:
எனக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளது. நான் இதுவரை பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பேருந்து வசதிகள் இல்லாததால் மருந்து மாத்திரைகள் வாங்கவும் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்று வரவும் உதவிக்கு ஒருவரை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. கொரோனா பயம் காரணமாக மருத்துவமனைக்கு சென்று வரவும் பயமாக இருந்தது.
இந்த நிலையில் எங்களை போன்றவர்களின் துயர் துடைக்கும் வகையில் வீட்டிற்கே நேரடியாக வந்து உரிய பரிசோதனை மேற்கொண்டு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கிட வேண்டும் என்று மக்களைத் தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் மருத்துவக் குழுவினர் வீட்டிற்கே வந்து என்னை பரிசோதித்து, இரண்டு மாதத்திற்கு தேவையான மாத்திரைகளை வழங்கினார்கள்.
வீடு தேடி வந்து சிகிச்சை அளித்து, மருத்துவ ஆலோசனைகளை கூறி, தேவையான மருந்து மாத்திரைகளையும் வழங்கிட மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டத்தை நிறைவேற்றி தந்த முதல்வருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, எனது ஆயுள் உள்ளவரை நன்றி கடன் பட்டவராக இருப்பேன் என்றார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் தேவையைப் புரிந்து கொண்டு வரலாற்று சிறப்புமிக்க திட்டமான மக்களை தேடி மருத்துவத் திட்டம் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வரலாற்று சிறப்புமிக்க 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம்,விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. தந்தையின் தொலைநோக்குப் பார்வையை அப்படியே தன் செயல்களால் அனுதினமும் நிரூபித்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதற்கு இத்திட்டம் ஒரு சிறந்த சான்றாகும்.



