சேலம் மாவட்டத்தில், ‘மக்களைத் தேடி மருத்துவம்‘ திட்டத்தின் கீழ் பரிசோதனை மூலமாக 2239 உயர் இரத்த அழுத்த நோயாளிகளும், 959 சர்க்கரை நோயாளிகளும், இந்த இரண்டு நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக 708 நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.
இதுவரை 1669 பேருக்கு இரண்டு மாதங்களுக்கான மருத்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தொற்றா நோய்களின் சுமையை எதிர் கொள்ளும் விதமாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வழங்குதல், இயன்முறை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சேவைகளை அளிக்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இத்திட்ட துவக்க விழா நிகழ்விடத்தில் இருந்து சேலம், மதுரை, கோவை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, சென்னை ஆகிய 7 மாவட்டங்களில் நேரடி ஒளிபரப்பு வழியாக தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பயனாளிகளின் வீட்டிற்கே சென்று தொற்றா நோய்களுக்கான மருந்து பெட்டகத்தை வழங்கி, நோயாளியின் வீட்டிற்குச் சென்று அவருக்கு தேவையான, இயன்முறை சிகிச்சையினை பார்வையிட்டு ஊக்கப்படுத்தினார் முதல்வர். இதைத் தொடர்ந்து நோயாளிகளின் வீட்டிற்கு நேரில் சென்று சேவை அளிப்பதற்கான வாகனங்களை இத்திட்டத்தின் கீழ் துவக்கி வைத்தார்.
சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மோட்டாங்குறிச்சி துணை சுகாதார நிலையத்தைச் சார்ந்த சத்யா காலனியில் காணொளி வாயிலாக, கடந்த 5-ம் தேதி, முதல்வர் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. ராஜேந்திரன் ஆகியோர் இத்திட்டத்தின் மூலம் மக்களின் இல்லத்திற்கே சென்று 2 மாதங்களுக்கான மருந்துகளை வழங்கினர்.
முதல்வரின் உத்தரவுப்படி, சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், சந்தியூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுமக்கள் இல்லத்திற்கு சென்று மருத்துவ சேவை அளிப்பதை பார்வையிட்டு மருந்துகளை வழங்கினார்.
இத்திட்டத்தின்படி ஒருங்கிணைந்த மற்றும் விரிவான இல்லம் தேடி வரும் மருத்துவ சேவைகள் வாயிலாக, நோய் சிகிச்சைக்கான தொடர் கவனிப்பு, நிலையான சேவைகளை உறுதி செய்வதுடன் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் சுகாதார தேவைகளை கண்டறிந்து ஆவன செய்யப்படும்.
சமுதாய நலப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளி பற்றியும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்துவது இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.
சேலம் மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் பரிசோதனை மூலமாக 2239 உயர் இரத்த அழுத்த நோயாளிகளும், 959 சர்க்கரை நோயாளிகளும், இந்த இரண்டு நோயினாலும் பாதிக்கப்பட்டுள் ளதாக 708 நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.
இதுவரை 1669 பேருக்கு இரண்டு மாதங்களுக்கான மருத்துப் பெட்டகங்கள் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பெண் சுகாதார தன்னார்வலர்கள் வழங்கி உள்ளனர்.
முதுகுத் தண்டுவடம் செயலிழப்பு, மூட்டுத் தேய்மானம், பக்கவாதம், தலைச்சிதைவு நோய், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல் போன்ற சேவைகள் மற்றும் அதற்கென வட்டார அளவில் நியமிக்கப்பட்டுள்ள பிசியோதெரபிஸ்ட் மற்றும் நோய் ஆதரவு செவிலியர் ஆகியோர் மூலம் மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 178 நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நோயாளியும் சமுதாய நலப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வகைப்படுத்தப்படுகிறார்கள்.
இத்திட்டத்தின் கள அளவிலான குழுவில், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன த்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதாரச் சேவையாளர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவுச் செவிலியர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பொது சுகாதாரத் துறையின் களப்பணியாளர்கள், இக்குழுவினரின் செயல்பாடு களைக் கண்காணித்து வழிநடத்துவார்கள்.
மல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தியூர் கிராமம், சின்னமாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் செல்லப்பன் மகள் கூறியதாவது:
என் அப்பா கடந்த 10 ஆண்டுகளாக இரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சைக்காக 4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பேருந்தில் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டாக பக்கவாத நோயால் படுத்த படுக்கையாகிவிட்டார். அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல எனக்கு வசதி இல்லாததால், வீட்டிலேயே கவனித்து வந்தோம். தற்போது, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வீட்டிற்கே வந்து மருந்துகள் வழங்கி, முடநீக்கு சிகிச்சை அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதனால் எனக்கு செலவும், நேரமும் குறைகிறது. இத்தகைய சிறப்பான திட்டத்தை தொடங்கி வைத்து வழங்கிய முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்து கொள்கிறேன்.
அலைச்சல் குறைந்தது
கன்னங்குறிச்சி தேர்வு நிலை பேரூராட்சி மோட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் (வயது 67) தெரிவித்ததாவது:
மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். கூலி வேலை செய்கிறேன். கடந்த 8 ஆண்டுகளாக இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் அவதிப்படுகிறேன்.
இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கன்னங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். தற்போது, மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தில், வீட்டிற்கே வந்து தன்னார்வலர்கள், உடலின் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் பரிசோதனைகளை செய்தார்கள்.
இரண்டு மாதத்திற்கான மருந்து, மாத்திரைகளை வழங்கினர். இதனால் எனக்கு போக்குவரத்து செலவு கணிசமாக குறைந்துள்ளது. இந்த அற்புதமான திட்டத்தை வழங்கிய முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நோய் கட்டுப்பாடு அறிவுரை
கன்னங்குறிச்சி தேர்வு நிலை பேரூராட்சி மோட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஹரிராமன் மனைவி அமுதா (வயது 47) தெரிவித்ததாவது:
கணவர், குழந்தைகளுடன் கூலி வேலை செய்து வசித்து வருகிறேன்.
இதுவரை ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேலம் கன்னங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன். தலைசுற்றல் ஏற்பட்டு நடக்க முடியாத சூழ்நிலையிலும் கூட சிரமத்துடன் பேருந்தில் பயணம் செய்து மருத்துவமனை சென்று சிகிச்சை பெறுவேன்.
இப்போது, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் செவிலியர்கள், வீட்டுக்கே வந்து இரத்த அழுத்தம் பரிசோதனை செய்து எனக்கு இரண்டு மாதத்திற்கான மருந்துகளை வழங்கினார்கள்.
உணவு கட்டுப்பாடு, நடைப்பயிற்சி போன்ற நோய் கட்டுப்பாடு குறித்து அறிவுறுத்தினார்கள். இதற்காக தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியை என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.
படுத்த படுக்கையாக 4 ஆண்டுகள்
கன்னங்குறிச்சி தேர்வு நிலை, பேரூராட்சி மோட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சின்னண்ணன் (வயது 51) தெரிவித்ததாவது:
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்பாராத விபத்தில் சிக்கியதால், கழுத்து தண்டுவடம் பாதிக்கப்பட்டது.
இதனால், இரு கை, கால்கள் செயல் இழந்துவிட்டன. படுத்த படுக்கையாக உள்ளேன். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் வீட்டிற்கே வந்து இயன்முறை சிகிச்சை அளிப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இத்திட்டத்தை வழங்கிய முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முழங்கால் வலியால் சிரமம்
கன்னங்குறிச்சி தேர்வு நிலை பேரூராட்சி, மோட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள் (வயது 70) தெரிவித்ததாவது:
கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறேன். முழங்கால் வலியினால் கடந்த மூன்று ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தேன். ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைக்கு செல்ல இயலாமல் அவதிப்பட்டேன்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், வீட்டிற்கே வந்து இயன்முறை சிகிச்சையாளர் பயிற்சி மற்றும் வலி சிகிச்சை அளிப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இத்திட்டத்தை வழங்கிய முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொகுப்பு
கி. மோகன்ராஜ்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
கா.கிருஷ்ணமூர்த்தி
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்)
சேலம் மாவட்டம்.



