கோவை அவினாசி சாலை அண்ணா சிலை அருகிலுள்ள தனியார் ஹோட்டலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின் மேற்கு மாவட்டங்களின் தொழில் துறையினருக்கான மேம்பாட்டு கூட்டம் முதன் முறையாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று பேசியதாவது:
கொரோனா பெருந்தொற்றால் நாடு எப்போதும் இல்லாத வகையில் சவால்களை சந்தித்து வருகிறது. புதிய தொழில்நுட்பம் காரணமாக புதிய தொழில்கள் வர தொடங்கியுள்ளது.
அதனை நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பதை பார்க்க வேண்டும். தொழில்முனைவோர்களின் மேம்பாடு, தொழிற்துறையில் புதிதாக வருவோர்களின் மேம்பாடு என இருவேறு விவகாரங்களை முக்கியமாக பார்க்க வேண்டிய சூழல் உள்ளது.
தொழிற்சாலைகள் பெரும்பாலும் சென்னை, அதனை சுற்றியுள்ள இடங்களில் தான் வருகிறது. எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களை மேம்ப டுத்தினால் தான் பொருளாதாரம் வளரும். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அந்த துறையை மீட்டெடுக்க வேண்டும்.
இது தான் தற்போது தமிழக அரசின் பிரதானமாக நடவடிக்கையாக உள்ளது.
மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் கோவை மாவட்டம் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. இம்மாவட்டத்தின் நீண்ட கால கோரிக்கையான ஏற்று மதி கொள்கை ஓரிரு நாட்களில் அறிவிக்கப் பட உள்ளது.
வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும் இந்த அரசு முனைப்பாக உள்ளது. கோவையிலும் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.



