பல பருவங்களைக் கடந்து, முதுமை எனும் பருவத்தை அடைகிறான் ஒரு மனிதன். முதுமை என்பது அனுபவத்தின் பொக்கிஷமாக திகழ்கிறது என்று கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் புகழாரம் சூட்டினார்.
உலக முதியோர் தினத்தை முன் னிட்டு, கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (அக்.1) சமூக நலத்துறையின் சார்பில், உலக முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது.
இதில், 80 வயது முடிவுற்ற மூத்த குடிமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: ஒரு மனிதன் பிறந்தது முதல் குழந்தைப் பருவம், வளரிளம் பருவம், வயது வந்தோர் பருவம் போன்ற பருவங்களை கடந்து முதுமை எனும் பருவத்தை அடைகிறான்.
முதுமை என்பது அனுபவத்தின் பொக்கிஷமாக திகழ்கிறது. உலக முதியோர் தினம் ஒவ் வொரு ஆண்டும் அக்டோபர் முதல் தேதியில் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது.
எண் முறை (டிஜிட்டல்) பயன்பாடு அனைத்து வயதினருக்கும் உரியது என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, இந்த ஆண்டு உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில், அனைத்து வகைகளிலும், சமூகத்திற்கும் தேசநலனிற்கும் சேவையாற்றிய இந்நாட்டின் மூத்த குடிமக்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த முதியோர் தின வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஊக்கம் அடைகிறோம்
முதியோர்களின் அனுபவம் அறிவு, சாதனைகள் ஆகியவற்றை நினைவு கூர்ந்து இளைய தலைமுறையினர் அனைவரும் ஊக்கம் அடைகிறோம். உழைப்பாலும், உள்ளத்தாலும் வழிகாட்டு தலினாலும் சிறந்த சமுதாயத்தை தட்டி எழுப்பிய மூத்த குடிமக்களாகிய உங்களை நினைத்து பெருமிதம் அடைகிறோம்.
ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டு மக்களின் பணித்திறனை சார்ந்துள்ளது.
தற்போது பெருகிவரும் மக்கள் தொகையின் காரணமாக, வயது அமைப்பிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அறிவியல் முன் னேற்றத்தின் காரணமாக இறப்பு விகிதம் குறைந்து மனிதனின் வாழ் நாள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத் தின் மக்கள் தொகை யில் 8.82 சதவிகிதம் முதியோர் உள்ளனர்.
வாழ்நாள் நீட்டிப்பு காரணமாக முதியோர் பல்வேறுபட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர். முதுமை பருவத்தில் ஏற்படும் உடல் மாற்றங்கள், நோய்கள், உணவு முறைகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் இளைய சமுதாயத்தினர் முதியோர்களுக்கு ஆற்ற வேண்டிய தொண்டு ஆகியவற்றினை நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.
மானியத்துடன் திட்டங்கள்
முதியோர்களை பாது காப்புடன் பராமரித்து, அவர்கள் சமுதாயத்தில் ஒரு கௌரவமிக்க இடத்தினை பெறும் வகையில், தமிழக அரசு முதியோர்களுக்கென பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசினால் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் முதியோர் இல்லங்களுக்கு பராமரிப்பு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. நடமாடும் மருத்துவ ஊர்தி மற்றும் மருந்துகள் செலவினத்திற்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
முதியோர்களுக்கு ஆலோசனை வழங்க ஆலோசனை மையம் அமைத்திட ஆண்டு ஒன்றிற்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. டே கேர் சென்டர் நடத்திட மானியம் வழங்கப்பட்டு வருகிறது. முடநீக்கு மையம் நடத்திட மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் முதியோர்களுக் கான சில முத்தான திட்டங்கள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான சிறப்பு இல்லங்கள் உள்ளடக்கிய ஒருங் கிணைந்த வளாகத்தை காணொளி காட்சி மூலம், முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.
இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
மாநில அரசு 80 சதவீத மானியத்துடன் மாவட்டத்திற்கு ஒரு முதியோர் இல்லம் நடத்தப்ப டுகிறது. கோவை மாவட்டம் மத்திபாளையத்தில் மாவட்ட நலச் சங்கம், முதியோர் இல்லம் தன்ன£ர்வ தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படுகிறது.
முதியோர்களுக்கான அரசு மருத்துவமனைகளில் தனிப்பட்ட மற்றும் முழுமையான முதியோர் பராமரிப்பு பணிகள், முதியோர்களுக்கென மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பணிகள் மற்றும் சிறப்பு புறநோயாளிகள் பிரிவுகள் மற்றும் படுக்கைகள், இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம், அரசுப் போக்குவரத்து பேருந்துகளில் சிறப்பு இருக்கை வசதிகள், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள முதியோருக்கான மதிய உணவுத்திட்டம், விலையில்லா அரிசி விநியோகம், தொலைபேசி இணைப்பு பதிவு செய்தலில் சலுகை, இலவச, வேட்டி, சேலை வழங்குதல், முதியோர் இல்லங்கள் செயல்படுத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு மானிய உதவி அளித்தல், தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் மாதமொன்றிற்கு 10 கிலோ அரிசி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
முதியோர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க 14567 என்ற இலவச உதவி எண் நடை முறைப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
விழாவில், மாவட்ட சமூக நல அலுவலர் ப.தங்கமணி, வருவாய் கோட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன், வை.இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



