நாடு முழுவதும் பல்லாண்டுகளாக வரதட்சணை புரையோடிப்போயிருக்கிறது. வரதட்சணை கொடுமைக்கும் பஞ்சமில்லை; அதன் காரணமாக இளம்பெண்கள் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
வரதட்சணை தடுப்பு சட்டங்கள் பாய்ந்தாலும், போதிய பலன் கிட்டவில்லை. குறிப்பாக, படித்தவர்கள் அதிகம் வசிக்கும் அண்டை மாநிலமான கேரளாவில் வரதட்சணை பிரச்சினை கொழுந்துவிட்டு எரிகிறது.
சமீபத்தில் கூட அங்கு ஒரு இளம்பெண் சித்திரவதைக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் வரதட்சணை வழக்குகள் பதிவாவது அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில் வரதட்சணையை ஒழிக்க கேரள அரசு புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் அரசு பணியில் உள்ள ஆண்கள், திருமணம் முடிந்த கையோடு தந்தை, மனைவி, மாமனாரிடம் இருந்து ‘வரதட்சணை வாங்கவில்லை’ என உறுதிமொழி பத்திரம் வாங்கி சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த அதிரடி உத்தரவு கேரள அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தினாலும் வரதட்சணைக்கு ஆதரவாக அவர்களால், எப்படி சட்டவிரோதமாக குரல் கொடுக்க முடியும்?
வரதட்சணையை ஒழிக்க இந்த உத்தரவை முதல் கட்ட நடவடிக்கையாக எடுத்து கொள்ளலாம். இதனை படிப்படியாக விரிவுபடுத்த வேண்டுமானால் சமூக விழிப்புணர்வும் அவசியம்.
இந்த விஷயத்தில் கேரள அரசு, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக முதல் அடி எடுத்து வைத்துள்ளது. அதனை மற்ற மாநிலங்களும் பின் தொடரலாமே!
முயற்சி திருவினையாக்கும்.
விடா முயற்சி மூலம் வரதட்சணைக்கு முற்றுப்புள்ளி வைக்க போராடுவோம். வெற்றி வெகுதூரத்தில் இல்லை.



