fbpx
Homeதலையங்கம்மனிதாபிமானமற்றவர்களை என்ன செய்வது?

மனிதாபிமானமற்றவர்களை என்ன செய்வது?

மதுரையை சேர்ந்த தனியார் அறக்கட்டளை ஒன்று ஆதரவற்ற வர்களுக்கு அடைக்கலம் தருவதாக கூறி பொதுமக்களிடமிருந்து நன்கொடை வசூலித்து செயல்பட்டு வந்துள்ளது.

அரசு அதிகாரிகள் முதல் காவல் துறை அதிகாரிகள் வரை உயர்மட்டத்தில் இருக்கும் பலரும் அந்த அறக்கட்டளை நிர்வாகியின் செயல்பாடுகளை ஊக்குவித்து வந்தனர்.

இந்நிலையில் அறக்கட்டளை சார்பில் ஆதரவளிக்கப்பட்ட பெண்ணின் குழந்தை கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக கூறி அந்த குழந்தையை வேறு ஒருவருக்கு பணத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.

இந்த விஷயம் எப்படியோ வெளியே கசிந்துவிட இப்போது அறக்கட்டளை நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கிறார். குழந்தை இறந்ததாக போலியாக சான்றிதழ் பெற்றது முதல் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

காவல் துறையினரின் விசாரணையில் மேலும் பல உண்மைகள் வெளியே வரலாம். அதற்கு முதலில் தனியார்கள் நடத்தும் அறக்கட்டளையின் செயல்பாடுகளை அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்வதும், அங்கு தங்கியிருப்பவர்களிடம் விசாரித்து அறிவதும் முக்கியம்.

இதை யார் செய்வது? அரசின் சமூக நலத்துறை சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்படலாம், அல்லது பல துறைகளை சார்ந்த நிபுணர்கள் கொண்ட குழுவை நியமித்து அறக்கட்டளைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கலாம்.

சமூகத்திற்கு நல்லது செய்யும் நோக்கில் மாநிலம் முழுவதும் இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து குழுவாகவும், அறக்கட்டளை நிறுவியும், சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரமும் நல்லவர் களை போல் நடமாடும் சில நயவஞ்சகர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதும் அவசியம்.

கொரோனா நோய்த்தொற்று காலத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மனிதாபிமானமற்றவர்களை என்ன செய்வது? கடுமையான தண்டனை ஒன்றே இதுபோன்ற கொடூர செயல்கள் நடைபெறாமல் தடுக்க உதவும்.

படிக்க வேண்டும்

spot_img