இந்திய பிரதமர் & போப் ஆண்டவர் இடையே 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சந்திப்பு நிகழ்ந்துள்ளது. 2000ம் ஆண்டில் பிரதமராக இருந்த வாஜ்பாய் அப்போதைய போப் இரண்டாம் ஜான்பாலை சந்தித்து பேசினார்.
தற்போது ஜி.20 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்ற பிரதமர் மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்தித்து 1 மணி நேரத்திற்கு மேலாக உரையாடி இருக்கிறார்.
கொரோனா தொற்று, வறுமை ஒழிப்பு, பருவநிலை மாற்றம், பொருளாதார வளர்ச்சி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தியா வருமாறு மோடி அழைப்பு விடுக்க, அதனை கருணையோடு ஏற்றிருக்கிறார், போப் பிரான்சிஸ்.
இருவரும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதித்து இருந்தாலும் இந்தியாவை பொறுத்தமட்டில் இச்சந்திப்பு மத நல்லிணக்கத்துக்கு மேலும் வலுசேர்ப்பதாகவே கருதப்படுகிறது. மதசார்பற்ற நாடான இந்தியாவில் மத துவேஷங்கள் நீறுபூத்த நெருப்பாக ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது.
பிரதமர் மோடி & போப் சந்திப்பு, போப் வருகை போன்ற செயல்பாடுகள் இந்தியாவில் மதநல்லிணக்கம் மேலும் வளர வழிவகுக்கும். வளரட்டும் மதநல்லிணக்கம்!



