பிஜேபி ஆனாலும் காங்கிரஸ் ஆனாலும் மாநில தலைமை வலிமையாக இருப்பதை தேசிய கட்சிகள் விரும்புவதில்லை என்பது 1969க்கு பிறகு அதாவது காங்கிரஸ் பிளவு பட்டதற்கு பிறகு காணப்படும் போக்கு.
குறிப்பாக தென் இந்தியாவில் காமராஜர், சஞ்சீவ ரெட்டி, நிஜலிங்கப்பா போன்ற செல்வாக்கு உள்ள தலைவர்கள் உருவாகி விடக்கூடாது என்பதற்கு அடித்தளமிட்டது அன்றைய இந்திரா காந்தி தலைமை.
ராமகிருஷ்ண ஹெக்டே, அஞ்சய்யா, சரத்பவார், அர்ஜுன் சிங், ராஜசேகர் ரெட்டி என்று மேலிடத்தின் இந்த கண்ணோட்டத்தால் பாதிக்கப்பட்ட மாநில தலைவர்கள் ஏராளம். உத்தரகாண்டில் 4 மாத இடைவெளியில் 2 முதல்வர்களை பிஜேபி தலைமை மாற்றியது.
பஞ்சாபில் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் செல்வாக்குக்கு கடிவாளம் போடும் விதத்தில் அவரது அரசியல் எதிரியான சித்துவை மாநில தலைவராக காங்கிரஸ் நியமித்ததும் கூட தேசிய தலைமைகளின் கண்ணோட்டத்தின் எடுத்துக் காட்டு. அந்த வரிசையில் இணைகிறார் இப்போது பதவி விலகியிருக்கும் எடியூரப்பா.
ஆர்எஸ்எஸ் பின்னணியுடன் கூடிய லிங்காயத் சமுதாயத்தின் அசைக்கமுடியாத அரசியல் தலைவர்களாக இருந்தாலும் கூட எடியூரப்பாவின் அணுகுமுறை வித்தியாசமானது.
அனைத்து மதத்தினர் ஜாதிப்பிரிவினரின் நன்மதிப்பை பெற்றிருந்தவர் அவர். எந்தவொரு சமுதாயப்பிரிவும் அவரை விரோதியாக பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தன் மதத்தையோ, ஜாதியையோ அவர் பயன்படுத்தியதில்லை.
துவேச அரசியல் எடியூரப்பாவுக்கு எப்போதும் இருந்ததே கிடையாது. அவருக்கு துரோகம் இழைத்தவர்களிடம் கூட அவர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொண்டதில்லை என்பதை மாற்று கட்சியினரும் கூட ஒப்புக்கொள்வார்கள்.
காங்கிரஸ், மஜதவில் இருந்து விலகி பாஜ அரசு அமைய காரணமாக இருந்த புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை அரசை எப்படி நடத்த போகிறார் என்பதை பொறுத்து பாஜக அரசின் ஸ்திரத்தன்மை அமையும்.
பதவியிலிருந்து விலகினாலும் கர்நாடக அரசியலில் எடியூரப்பாவின் இன்றியமையாமையை அகற்றிவிட முடியாது.
ஆளுநர் பதவியை ஏற்றுக்கொள்ள போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார் எடியூரப்பா. அடுத்து என்ன நடக்கபோகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



