இந்தியாவில் தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பு வழிகாட்டுதல்கள் 11 ஆண்டுகள் கழித்து தற்போது ஒன்றிய அரசு திருத்தி அமைத்துள்ளது.
அதன்படி, நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி பெற வேண்டிய தேவை நீக்கப்பட்டுள்ளது.
சேனல்கள் தாங்கள் ஒளிபரப்பும் மொழியை மாற்றுவதற்கு ஒப்புதல் தேவையில்லை. செய்தி நிறுவனங்களுக்கு தற்போது ஓராண்டுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவரும் அனுமதி இனி ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இதுபோன்ற அறிவிக்கப்பட்ட பல வழிகாட்டு நெறிமுறைகளில், பெண்களின் உரிமைகளை ஊக்குவித்தல், கல்வியறிவை ஊக்குவித்தல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவித்தல், சுகாதாரம் மற்றும் குடும்ப நலனை ஊக்குவித்தல் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளில் 30 நிமிட பொதுநல நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும் என்பது அதிமுக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நெறிமுறை மீது விமர்சனங்களும் எழுந்துள்ளது. இது சேனல்கள் மீதான அடக்குமுறை என்றும் பாஜக தனது வேதத்தை ஓத உருவாக்கியுள்ள சுயநலம் என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
ஆனாலும், தேச நலன் நிகழ்ச்சி டிவி சேனல்களில் ஒளிபரப்பப்படும் என்பது மிகமிக வரவேற்கத்தக்க ஓர் அறிவிப்பாகும். ஆனால் இந்த ஒளிபரப்பில் எக்காரணத்தைக் கொண்டும் அரசியல் புகுந்து விடக்கூடாது.
குறிப்பாக ஆளுங்கட்சி தனது கொள்கைகளைத் திணிக்கும் நிகழ்வாக மாறிவிடக் கூடாது. தேசிய நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்பட வேண்டும். எந்த ஒரு புகாருக்கும் இடம்தராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
முன்பெல்லாம் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் இருக்கும். அதேபோல டிவி சேனல்களில் சினிமா, சீரியல் என மக்களை மயக்கும் நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் ஒரு அரை மணி நேரம் இடம்பெறப் போகும் ‘தேச நலன்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாவது நல்லது தானே.
வரவேற்று ஒளிபரப்பு நாளை எதிர்பார்ப்போம்!