தன்னிடம் படிக்கும் மாணவர்கள் அத்தனை பேரும் சிறந்தவர்களாக, ஒழுக்கம் உள்ளவர்களாக, நன்கு படித்து உயர் நிலைக்கு வரவேண்டும் என்று தான் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் நினைத்து பாடம் சொல்லித் தருவார்கள்.
இப்போதெல்லாம் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்க முடியாது, அடிக்கவும் கூடாது என்கிறது சட்டம். திறன் குறைந்த மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி அவர்களையும் வெற்றி பெறச் செய்து வந்த ஆசிரியர்களின் மனநிலையில் தற்போது மாற்றம் ஏற்படத் தொடங்கி விட்டதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
தவறு செய்யும் ஒருசில மாணவர்களை கண்டிக்கக் கூட ஆசிரியர்கள் தயங்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலை கொஞ்சமாவது மாறவேண்டும். ஆசிரியர்கள் அச்சமின்றி வகுப்பறையில் பாடமெடுக்க வேண்டும்.
ஆனால் தமிழக பள்ளிகளில் அதிகரித்து வரும், ஆசிரியர்கள் மீது மாணவர்கள் நிகழ்த்தும் வன்முறைச் சம்பவங்கள் வேதனை தருகிறது.
ஓரிரு மாணவர்களின் ஒழுங்கீன நடவடிக்கைகளால், பள்ளிக்கு வருவதற்கே அச்சமாக இருப்பதாக பல ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இது கேவலம் இல்லையா? நாட்டுக்கே அவமானம் தானே.
மாணவர்களை வழி நடத்தும் பெரும் பணியில் பெற்றோரை விட ஆசிரியர்களே முன்னிலையில் இருப்பார்கள். அவர்களை அவமதிக்கலாமா? மாதா, பிதா, குரு தெய்வம் என்பது மறந்து போய் விட்டதா? ஆசிரியர்கள் சுதந்திரமாக செயல்பட, அவர்களுக்கு பெற்றோர் பக்கபலமாக இருக்க வேண்டிய நிலை மீண்டும் உருவாக வேண்டும்.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு அவர்கள், எத்தனையோ மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு ரோல் மாடலாகத் திகழ்கிறார். அவர் சொல்வதையாவது மாணவர்கள் கேட்க வேண்டாமா?
அதிகரித்து வரும் சம்பவங்கள் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘இணையத்தில் வலம் வரும் காணொலிகளை பார்த்து ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்ற மனநிலையில் பேசுகிறேன்.
போதிய வருமானம் இல்லாத பெற்றோர்களே அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கிறார்கள். அரசுப்பள்ளி மாணவர்களே! உங்கள் பெற்றோரிடம் சொத்து இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் உங்களுக்கு அப்படி அல்ல. உங்கள் அரசுப்பள்ளி தான் உங்கள் சொத்து! அங்குள்ள மைதானம், வகுப்பறை, மேஜை, நாற்காலிகள், அங்கிருக்கும் ஆசிரியர்கள் அனைத்தும் உங்கள் சொத்து!
அந்த ஆசிரியர்களால்தான் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். ஆனால் தற்போது ஆசிரியர்களை தாக்க மாணவர்கள் கை ஓங்குவதைப் பார்க்க முடிகிறது. எப்படி இந்தச் சூழல் ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
இந்த ஆசிரியர்கள் நமக்கு கணிதம், அறிவியல், புவியியல், வரலாறு, கணிப்பொறி ஆகியவற்றை சொல்லித் தருவார்கள். இவர்கள் நமக்கு மிகப்பெரிய சொத்து. நம் கற்றுக் கொள்வதற்கான ஆதாரம்.
அறிவையும், செயல்திறனையும், நல்ல மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டிய தருணத்தில் இது போன்ற வன்முறைச் செயல்களில் ஏன் ஈடுபடுகிறீர்கள்? இது நம் வீட்டை நாமே தீவைத்து கொளுத்துவது போல உள்ளது.
நம் கைகால்களை நாமே வெட்டுவது போல, நமக்கான ஆதாரங்களை நாமே அழிக்கலாமா? கடவுளுக்கும் மேலான அவர்களிடமா இந்த வன்முறை? தயவுசெய்து இது போன்ற செயல்களை இனி செய்யாதீர்கள். நீங்கள் முழு மனிதனாக, செயல்திறன் மிக்கவராக, சிந்தனையாளராக மாற தயார் செய்யும் பயிற்சிக்கூடம் தான் பள்ளிக்கூடம்.
அந்த இடத்திற்கு ரொம்ப மரியாதை கொடுக்க வேண்டும். ஆசிரியப் பெருமக்களை உயர்வாக எண்ண வேண்டும். உங்களுடைய மனநிலை மாற வேண்டும். பள்ளிக்கூடங்களில் வன்முறையில் ஈடுபடுவது சட்டப்படியும் குற்றம்.
ஆதலால் தயவுசெய்து மீண்டும் இந்த குற்றத்தை நீங்கள் செய்யாதீர்கள்’ என்று மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், டிஜிபி சைலேந்திரபாபு.
ஒரு நேர்மையான போலீ-ஸ் அதிகாரி, சிறந்த பேச்சாளர், கல்வியாளர், இலக்கியவாதி… இப்படி பன்முகத் திறன் கொண்ட சைலேந்திரபாபு சொல்வதை மாணவர்கள் கேட்டு அதன்படி செயல்பட வேண்டும்.
இல்லையென்றால் பின்னாளில் வருந்த வேண்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
மாணவர்களே, ஒளிமயமான எதிர்காலம் வேண்டுமானால் விழிப்புடன் இருங்கள். ஆசிரியர்களிடமும் சக மாணவர்களிடமும் நல்லுறவை பேணுங்கள்!



