1920இல் நீதிக்கட்சித் தலைவர் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோது, மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. காமராசர் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது.
கலைஞர், எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்திலும் சிறப்பான சத்துணவுத் திட்டமாக வளர்ந்து பயன்தந்தது.
இதன் அடுத்தக்கட்ட நகர்வாக, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தலைவர் -மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக பள்ளிக்குழந்தைகளுக்குக் காலை உணவும் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மதுரையில் இன்று (15ம் தேதி) இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை (16 ம் தேதி) முதல் மற்ற பள்ளிகளில் நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான வழி காட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி காலை சிற்றுண்டி தயாரிக்கப்பட்டு பள்ளிகளில் நாள்தோறும் காலை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். நாள்தோறும் உரிய நேரத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை திட்ட செயலாக்க அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும்.
ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் சிற்றுண்டிக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம், உள்ளூரில் கிடைக்கக்கூடிய காய்கறிகள். சமைத்த பின் 150 முதல் 200 கிராம் உணவு மற்றும் 60 கிராம் காய்கறியுடன் கூடிய சாம்பார் வழங்கப்பட வேண்டும்.
கிச்சடி 100 கிராம் அளவிலும், ரவை அல்லது சேமியா கேசரி 60 கிராம் அளவிலும் வழங்கப்பட வேண்டும். தினமும் என்னென்ன உணவு வழங்க வேண்டும் என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
மாணவ, மாணவிகளுக்கு இனி மதிய உணவோடு காலை உணவும் கிடைக்கும். மதிய உணவு வழங்கியதன் மூலம் ஏழை மாணவ, மாணவிகள் பள்ளிகளில் அதிகளவில் சேர வழிவகுத்தது. கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது காலை உணவும் வழங்கப்படுவதால் தமிழகத்தில் கல்வி கற்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதிலும் இடைநிற்றல் கணிசமாகக் குறையும் என்பதிலும் சந்தேகமில்லை.
கல்விப்புரட்சிக்கு வித்திட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை எத்தனை பாராட்டினாலும் தகும்.
இந்த திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வரலாற்றுச் சாதனையாக திகழப்போவதும் அவரது பெயர் தமிழக சரித்திர பொன்னேட்டில் பொரிக்கப்படும் என்பதும் திண்ணம்!



