மாண்பமை தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படியும், மாண்பமை தமிழ்நாடு மாநில சட் டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும், 75-ம் ஆண்டு சுதந்திர தின விழா, மாண்பமை தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் 25-ம் ஆண்டு நிறைவு விழாக்களை முன்னிட்டு, கடந்த அக்.2-ம் தேதி முதல் வரும் 14-ம் தேதி வரை சட்ட விழிப்புணர்வு முகாம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
சட்டப்பணிகள் தினத்தை கொண்டாடும் வகையில் தருமபுரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் தேசிய மகளிர் ஆணையமும் இணைந்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஆ. மணிமொழி வழிகாட்டுதலின்படி, தருமபுரி பி.எம்.பி.கலை அறிவியல் கல்லூரியில் பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
கல்லூரி முதல்வர் எஸ்.திருநாவுக்கரசு வரவேற்றார். தருமபுரி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ராஜா கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார்.
மாவட்ட சட்டப் பணிகள் செயலா ளரும், சார்பு நீதிபதியான பி.எஸ்.கலைவாணி பெண்கள் மேம்பாடு குறித்தும், சட்டப்பணிகள் செயல்பாடு குறித்தும் பேசினார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான அரசு பாதுகாப்பு குறித்து பேசினார்.
மக்களுக்குள்ள சட்டப் பாதுகாப்பு குறித்து மூத்த பெண் வழக்கறிஞர்கள் அருள்ஜோதி, ஆசியஜோதி ஆகியோர் பேசினர். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.



