மும்பையில் இருந்து சென்னை செல்லும் ஏர் இந்தியா விமானம் மூலம் தன் அன்புக்குரிய செல்லநாய்க்குட்டியை ஏற்றி வந்துள்ளார் ஒரு பெண்மணி.
இதில் என்ன வியப்பு உள்ளது என்கிறீர்களா? தன் செல்லப்பிராணியை யாருடைய தொந்தரவும் இல்லாமல் சௌகரியமாக பயணித்து வரவேண்டும் என்பதற்காக விமானத்தின் விலைமதிப்புமிக்க இருக்கையாக கருதப்படும் பிசினஸ் கிளாசில் இருக்கும் இருக்கைகள் அனைத்திற்கும் பணம் கட்டி அழைத்து வந்திருக்கிறார் அந்தப் பெண்.
இதற்காக அவர் செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா? அதிகம் ஒன்றும் இல்லை, வெறும் ரூ.2.4 லட்சம் மட்டுமே!
விமானத்தில் தான் தன் செல்லப்பிராணியை அழைத்து வரவேண்டும் என்று விரும்பினால் எகானமி வகுப்பில் ஒரு இருக்கையை மட்டும் புக் செய்து சௌகரியமான கூடையில் அல்லது கூண்டில் வைத்து அழைத்து வந்திருக்கலாம்.
செல்லப்பிராணி மீது மிகுந்த அன்புடையவராக அந்த பெண்மணி இருக்கலாம். அதற்காக சுமார் 2 மணி நேரப் பயணத்திற்காக ரூ.2.4 லட்சத்தை செலவு செய்திருக்கவேண்டுமா? என்ற கேள்வி எழாமல் இல்லை.
அந்தப் பணத்தின் மூலம் எத்தனையோ பிராணிகளுக்கு அவர் 2, 3 வேளைக்கு உணவு அளித்திருக்கலாம், ஆதரவற்றோருக்கு உதவியிருக்கலாம், ஏழைகளின் மருத்துவ செலவுக்கு நன்கொடை கொடுத்திருக்கலாம்.
இப்படிப் பலருடைய துயரைத் துடைத்திருக்கலாம். பண வசதி கொண்டவர்கள் ஏன் இப்படி யோசிக்க மறுக்கிறார்கள்? இது பெரும்பாலானவர்களின் கருத்து.
மனிதனுக்கு மனிதனே அன்பு செலுத்துவது குறைந்து வரும் இந்தக் காலத்தில் பாசமாக தான் வளர்த்து வரும் செல்லப்பிராணிக்காக அந்தப் பெண்மணி அவ்வளவு செலவு செய்திருப்பதை பாராட்டாமல் குற்றம் சொல்வது முறையா? என்றும் சிலர் வாதாடுகிறார்கள்.
ஒரு செல்ல நாய்க்குட்டிக்காக அதிக பணம் செலவழித்து விமானத்தில் அழைத்து வருவதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லை? பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாமா? சுய விளம்பரத்துக்காக இப்படிச் செய்யலாமா? என்று கோபப்படுபவர்களும் உள்ளனர்.
எல்லோரது கருத்துக்களும் அவரவர் கோணத்தில் இருந்து பார்த்தால் ஏற்புடையதே.



