நீலகிரி மாவட்டம் குன்னூர் கன்னிமாரியம்மன் கோயில் பகுதியில் வசித்துவரும் சிவா என்பவரை காட்டெருமை தாக்கியதில் அவர் படுகாய மடைந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் கன்னிமாரியம்மன்கோயில் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். நேற்று மாலை நேரத்தில் அப் பகுதியில் காட்டெருமை உலா வந்துள்ளது.
பலரும் பணியினை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், நடந்து சென்று கொண்டிருந்த காட்டெருமை திடீரென அங்கிருந்தவர்களை தாக்க முற்பட்டது.
அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த சிவா (35) என்பவரை மூர்க்கத்தனமாக தாக்கியது. இதில் வயிறு, முதுகு உள்ளிட்டப் பகுதிகளில் படுகாயமடைந்த சிவாவை, அருகிலிருந்தவர்கள் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனைக்கு வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் அடிக்கடி உலாவரும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு துரத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல முறை வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தும், வனத்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



