டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் சிஎன்ஜி கார்கள் விற்பனைப் பிரிவில், கிளான்சா மற்றும் அர்பன் க்ரூசர் ஹைரைடர் மாடல் கார்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா கிளான்சா, தற்போது எஸ் மற்றும் ஜி தரத்தில் சிஎன்ஜி தொழில்நுட்பத்தில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் பவர்டிரெய்னுடன் கிடைக்கிறது.
முதல் முறையாக தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி உடன் அர்பன் க்ரூசர் ஹைரைடர் காரும் எஸ் மற்றும் ஜி தரத்தில் வெளிவந்திருக்கிறது.
இந்த 2 தரத்திலும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் பவர்டிரெய்ன் பொருத்தப்பட்டிருக்கும்.
சிஎன்ஜி தொழில்நுட்பம் செல்ப்-சார்ஜிங் ஸ்ட்ராங் ஹைப்ரிட் எலக்ட்ரிக் மற்றும் நியோ டிரைவ் வகைகளுடன் கூடுதலாக இருக்கும். இந்த மாடல் கார்கள் ஏற்க னவே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு இணை துணைத்தலைவர் அதுல் சூட் கூறியதாவது:
தொலைநோக்குப் பார்வையுடன், சிஎன்ஜி பிரிவில் நுழைந்திருப்பது குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அந்த தொழில்நுட்பத்தை கிளான்சா, அர்பன் க்ரூசர் ஹைரைடர் காரில் அறிமுகம் செய்துள்ளோம்.
‘மொபிலிட்டி பார் ஆல்’
இந்த புதிய அறிமுகம் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும். இதன் மூலம் ‘மொபிலிட்டி பார் ஆல்’ என்ற எங்கள் தத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இந்த கார்களை வாடிக்கையாளர்கள் வாங்குவதன் மூலம் குறைந்த செலவில் கார்களுக்கான உரிமையா ளராவதோடு, அவர்களுக்கான மன அமைதியும், ‘அனைவருக்கும் நிறைவான மகிழ்ச்சி’யும் கிடைக்கும் என்றார்.
கிளான்சா சிஎன்ஜி கார்கள் சக்திவாய்ந்த ‘கே-வகை என்ஜின்’ மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளன. இதன் என்ஜின் 1197சிசி திறன் கொண்டதாகும். அர்பன் க்ரூசர் ஹைரைடர் கார் 1.5 லிட்டர் கே-வகை என்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இது 1 கிலோ கியாசிற்கு 26.1 கி.மீ. தூரம் பயணிக்கும் திறன் கொண்டதாகும்.
காரின் வெளிப்புறத் தோற்றத்தை பொறுத்தவரை, இதன் முன்புறத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
பகல் நேர இரட்டை எல்இடி விளக்குகள், முன்புற கிரில், ஆர்17 அலாய் சக்கரங்கள், எல்இடி பின்புற விளக்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.